பண இழப்பு மன பாதிப்பு

2 mins read
9690515a-178b-4416-a870-ce94f328bf29
மோசடிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நேற்று முன்தினம் நடந்த குழு விவாதம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வயதான பெண்மணி ஒருவர் அன்புக்குரியவரை இழந்ததை அறிந்த ஒரு மோசடிக்காரர், அவரிடம் நம்பிக்கைக்குரியவராக நடித்தார். அவரை நம்பி தமது வங்கிக் கணக்கிலிருந்து $120,000 எடுத்துக்கொடுத்தார் அந்த மூதாட்டி. தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அந்த மாது காவல் துறையை அழைத்தபோது காலம் கடந்துவிட்டது.

மூத்தோர் தலைமுறை அலுவலகத் தூதர் பேசியபோது ​​தன்னைச் சுற்றியுள்ளவர்களை நம்புவது மிகவும் கடினமாக இருப்பதாக சொன்னார் மூதாட்டி.

மோசடிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நேற்று முன்தினம் நடந்த குழு விவாதத்தில் இச்சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு பேசினார், ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை (ஏஐசி)யின் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல் பிரிவின் இயக்குநரான திருவாட்டி இவா லிம்.

"ஏற்கெனவே தனிமையிலிருந்த அந்த மூதாட்டி, மேலும் ஒடுங்கிப்போனார். மோசடிகளால் நிதி இழப்புடன், முதியோருக்கு பாதகமேற்படுத்தும் சமூக, மனநல பாதிப்புகளும் ஏற்படுகின்றன," என்றார் திருவாட்டி இவா.

மூத்தோர் தலைமுறை அலுவலகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் ஒரு பிரிவு. அதன் தூதர்கள் முதியோரின் தேவைகளை அறிந்து, நிவர்த்தி செய்கிறார்கள்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மோசடிகளுக்கு எதிரான இரண்டாவது 'ஸ்கேமினார்' கருத்தரங்கான 'ஆக்ட் அகைன்ஸ்ட் ஸ்கேம்சி'ல் திருவாட்டி இவா லிம் பேசினார்.

மோசடிகளின் தாக்கம் நிதி இழப்புகளுக்கு அப்பாற்பட்டது. மக்கள் மோசடிக்கு ஆளாகும்போது, ​​​அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது நம்பிக்கையை இழக்கிறார்கள் என்றார் கருத்தரங்கின் மற்றொரு பேச்சாளரான உள்துறை அமைச்சின் தலைமை உளவியலாளர் டாக்டர் மஜீத் காதர்.

"மோசடிக்கு ஆளாகும்போது சில நேரங்களில் தூங்குவது கடினம். மிகவும் கவலையாக இருக்கும். சிலர் தற்கொலைகூட செய்துகொண்டிருக்கிறார்கள். மோசடி சுய துன்புறுத்தலுக்கு இட்டுச் செல்வதையும் காணலாம்.மோசடியின் ஒரு தாக்கம் உடல் ரீ்தி யானது. மற்றது கவலை, மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் என உளவியல் ரீதியானது," என்று அவர் சுட்டினார்.

கருத்தரங்கில் பேசிய வெளிநாட்டு ஊழியர் மையத்தின் தொழிற்சங்கங்கள், திட்டங்கள் பிரிவின் தலைவரான திரு ஆர்.வி. சதீஷ் நாயுடு, வெளிநாட்டு ஊழியர்களும் மோசடிகளுக்கு ஆளாவதைக் குறிப்பிட்டார்.

அதிகாரிகளுக்குப் பயப்படும் அவர்கள் மனநிலை மோசடியில் விழ வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

"போலி அடையாள அட்டையைக் காட்டி அதிகாரிபோல் நடிக்கும்போது வெளிநாட்டு ஊழியர் தாம் ஏதோ தவறிழைத்து விட்டதாக கவலைப்படுகிறார். திருப்பி அனுப்பப்பட அவர்கள் விரும்புவதில்லை. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த அவர்கள், விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க நினைக்கிறார்கள்," என்றார் அவர்.

முதியவர்கள் மோசடிகளுக்கு ஆளாவதைத் தடுக்கும் ஒரு வழியாக, அவர்களது மின்னிலக்கத் திறன்களை வளர்க்க, எஸ்ஜி மின்னிலக்க அலுவலக மின்னிலக்கத் தூதர்கள் உதவி வருவ தாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கட்டமைப்புத் திட்ட அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு டான் ஃபோங் சிங் கூறினார்.