மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர், இணையத்தில் சந்தித்த ஒருவரிடம் காதல் கொண்டார். $200,000க்கும் அதிக மதிப்புள்ள காப்புறுதிகளை ஒப்படைத்து, கணவரையும் விவாகரத்து செய்தார்.
'அமெரிக்க ராணுவ மருத்துவர்' என்று கூறிக்கொண்ட அந்த மோசடிக்காரர் தெற்கு சூடானில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்த பணம் தேவை என்றும் சொல்லி அந்த 40 வயது மாதிடம் பணம் பறித்தார்.
இதனைக் கண்டுபிடித்த மாதின் கணவர், பணப் பரிமாற்றம் குறித்து காவல்துறையில் புகார் செய்தார்.
அந்த மாது மோசடியில் சிக்கியிருப்பதை நம்ப வைக்க மூன்று மாதங்களுக்கும் மேலாக காவல்துறை அதிகாரிகள் போராடினர்.
ஆனால், தாம் ஏமாற்றப்பட்டதை கணக்காளரான அந்த மாது தொடக்கத்தில் நம்பவில்லை. அவர் உண்மையை உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டது.
காதலர் குணமடைந்தவுடன், சிங்கப்பூருக்கு வந்து தன்னையும், 12, ஒன்பது, இரண்டு வயதுகளில் இருக்கும் தமது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்வார் என்று அவர் நம்பினார்.
மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக மோசடிக்காரர் அனுப்பிய புகைப்படங்கள் போலியானவை 'போட்டோஷாப்' செய்யப்பட்டவை என்பதை அதிகாரிகள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்.
மருத்துவமனையில் இருந்து வரும் மின்னஞ்சல்களில் காதலன் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியே இருப்பதைக் கவனித்த அந்த மாது இறுதியாக உண்மையை உணர்ந்தார்.
$200,000க்கும் அதிகமான ஆரம்ப கட்ட பண பரிமாற்றத்தை காவல்துறை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை என்றாலும், அந்தப் பெண் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம் $170,000 இழப்புகளை மீட்டனர்.
சிங்கப்பூர் மாநாடு கண்காட்சி மையத்தில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் பேசிய காவல்துறையின் மோசடி தடுப்பு துணை உதவி ஆணையர் (டிஏசி) ஐலீன் யாப் இச்சம்பவத்தை எடுத்துக்கூறினார்.
அமைச்சர் சுன் ஷுவெலிங் வழிநடத்திய மோசடிகளுக்கு எதிரான 'ஸ்கேமினார்' கருத்தரங்கில் அவர் பேசினார்.
"நிதி இழப்பைவிட அதிகமான பாதிப்பு அந்த மாதுக்கு ஏற்பட்டது. அவர்களது உறவை மீண்டும் புதுப்பிக்க முடியவில்லை என்றார் அவரது கணவர். மூன்று பிள்ளைகளும் கஷ்டப்பட்டனர். நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினார்," என்றார் ஐலீன் யாம்.
"மோசடிகள் உண்மையில் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. மோசடிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார் அவர்.
பொதுமக்கள் தங்கள் சாதனங்களில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பது, எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிப்பது, அதிகாரிகள் மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்களிடம் மோசடிகளைப் பற்றி கூறுவது போன்றவை மூலம் மோசடிக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
ஓசிபிசி வங்கியின் சட்ட குழுத் தலை வரான திருமதி லோரெட்டா யுயென், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையின் உதவி தலைமை நிர்வாகி திரு டான் யோக் ஹாவ், 'பிரென்ட்ஸோன்' தலைமை நிர்வாகி திருமதி கிரேஸ் ஆன் ஆகியோரும் கருத்தரங்கில் பேசினர்.
"படிப்பறிவில்லாதவர்கள் முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை, மாணவர்கள், வணிகர்கள், துப்புரவு ஊழியர் முதல் அலுவலக ஊழியர் வரை, பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் என எவரும் மோசடிக்குத் தப்பவில்லை.
"நம்பிக்கை, கனவுகள், அச்சங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்." என்றார் திருவாட்டி யுயென்.
விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பேச்சாளர்கள் விளக்கினர். தனிப்பட்ட விவரங்களை கேட்டு அல்லது பணம் அனுப்புவதற்காக தொலைபேசி அழைப்பு அல்லது செய்தியைப் பெறும் போதெல்லாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அழைப்பின் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம் என்று திருவாட்டி சுன் கூறினார்.
மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் பங்காற்ற முடியும் என்றார் அவர்.

