தனது இல்லப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகவும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த மாது, வழக்குவிசாரணையைத் தொடர்ந்து குற்றமற்றவர் என்று கருதப்பட்டு குற்றங் களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான கெட்டாக்கி ராய், 36, குற்றமற்றவர் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதன்வழி, அதே குற்றச்சாட்டுகளை அவர்மீது மீண்டும் சுமத்த முடியாது.
அந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரும் அதேபோன்ற குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியக் குடிமகளான வர்ஷா ரே, 28, அஜேய் ராய் லால்ஹர், 43, ஆகியோர் மீது போலி ஆவணம் தயாரித்ததாக தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இல்லப் பணிப்பெண் சுசி ரிமாசாரி, வழக்கு விசாரணை தொடங்கும் முன்னரே சிங்கப்பூரை விட்டு வெளியேறியதால் அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
திருவாட்டி சுசி சாட்சியம் அளிக்க விரும்பவில்லை என்பதையும் வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக அரசாங்க வழக்கறிஞர்கள் அவரைத் தேட போதுமான அளவு முயற்சி எடுத்தனர்என்பதையும் மாவட்ட நீதிபதி ரோனல்ட் குவீ சுட்டிக்காட்டினார்.
இந்நிலை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமாக அமைந்து விட்டது என்றும் குற்றம் சுமத்தியவர் குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள நீதிமன்றத்துக்கு வந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
திருவாட்டி கெட்டாக்கி, திருவாட்டி சுசியை 2015ல் ஒரு முறையும் 2016ல் ஒரு முறையும் அறைந்தார் என்றும் போலி சம்பள ரசீது களை மனிதவள அமைச்சிடம் ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.
கெட்டாக்கியும் அவரது மைத்துனர் அஜேய், அவரது மனைவி வர்ஷா இருவருடனும் சேர்ந்து பணிப்பெண் சுசி கையொப்பம் உள்ள போலி மன்னிப்பு கடிதத்தைத் தயாரித்தனர் என்றும் குறிப்பிடப்பட்டது.
அனுமதியின்றி பணத்தையும் பொருளையும் எடுத்தது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை சுசி செய்ததற்காக கெட்டாக்கி அவரை ஏசினாரே தவிர காயம் ஏற்படுத்தவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
2016 ஜூனில் சுசி பணியிடத்திலிருந்து வெளியேறி, தான் கொடுமைக்கு ஆளானதாகவும் தமக்கு உரிய சம்பளம் தரப்படவில்லை என்றும் உதவி கேட்டார்.

