பொருளியல் மந்தநிலையைத் தவிர்க்கவும் பொருளியலை தொடர்ந்து வளர்க்கவும் சிங்கப்பூர் விரும்புவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த எதிர்பார்ப்பு வெளிப்புறச் சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வருகையளித்த திரு லீ, அங்கிருந்த பேருந்து ஓட்டுநர்களையும் போக்குவரத்து ஊழியர்களையும் சந்தித்தார்.
சீனப் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியச் சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் பேருந்து ஓட்டுநர்கள், நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கடினமான ஈராண்டு காலத்திற்குப் பின்னர், கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பி இருப்பதாக அவர் சொன்னார்.
"இந்த ஆண்டு உலகளாவிய நிச்சயமற்ற நிலை எதிர்பார்க்கப்படுகிறது என்றார். முன்னேறிய நாடுகளில் பொருளியல் மந்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் வளர்ச்சி மெதுவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
"இந்த மந்தநிலையை தவிர்த்து நம்மால் இன்னும் வளர்ச்சி காணமுடியும் என்று கருதுகிறேன். இருப்பினும் சீனா எவ்வாறு தன்னுடைய வழக்கமான பணிகளுக்குத் திரும்புகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டி உள்ளது," என்றார்.
முகக்கவசங்கள் போன்றவற்றுடன் அன்பளிப்புப் பைகள் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, போகுவரத்து, நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், ஆகியோர் பிரதமருடன் வருகையளித்தனர்.

