'கிளப் ரெயின்போ' அறப்பணி நிறுவனம், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் பல வழிகளில் உதவி வருகிறது.
உடற்பயிற்சி சிகிச்சை மட்டுமன்றி, உளவியல், நிதி, கல்வி, சமூக ஆதரவு உள்ளிட்ட பலவற்றின் தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அந்த அமைப்பு உதவுகிறது.
கிளப் ரெயின்போ, 67 பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர், ஊழியர்கள், மருத்துவத் தொண்டூழியர்கள் என மொத்தம் 288 பேரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை சொகுசுக் கப்பலில் நான்கு நாள்கள் சுற்றுலாவாக பினாங்கு நகருக்கு அழைத்துச் சென்று அந்நகரைச் சுற்றிக்காட்டி பிறகு அழைத்து வந்தது.
ஆடல் பாடல் நிகழ்வுகள், அலங்காரப் போட்டிகள், தாள் கைவினைப் பொருள்கள் பயிற்சிப் பட்டறை, விளையாட்டுகள், பல வகை உணவுகள், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் வசதி, முதலுதவி மருத்துவ வசதிகள் உள்பட பலவும் சுற்றுலாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிள்ளைகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.
பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 17 வயதான துர்கேஸ்வரன் கிருஷ்ணன், தன் குடும்பத்தினருடன் சுற்றுலாவில் கலந்துகொண்டார். நான்கு சகோதரிகளுடன் பிறந்த இவர் தன்னுடைய தாயார், இரட்டை சகோதரியுடன் பயணித்தார்.
"நான்கு நாள்களும் பல குடும்பங்களுடன் ஒன்றாகச் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் மகன் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்ததை இதுவரை நான் கண்டதில்லை," என்று துர்கேஸ்வரனின் தாயார் திருவாட்டி நங்கை கிருஷ்ணன், 50, கூறினார்.
தசை பலவீனநோயால் பாதிக்கப்பட்ட ஷீரத் சஞ்சய், 18, தன் தாயார், பாட்டியுடன் இச்சுற்றுலாவில் பங்குகொண்டார்.
"கிளப் ரெயின்போ அறநிறுவனத்தின் பல்வேறு செயல்திட்டங்களும் பிள்ளைகள் எதிர்காலத்தில் தனித்து வாழ தயார்படுத்தி தன்னம்பிக்கையை வளர்க்கின்றன," என்று சஞ்சய்யின் தாயார் வனிதா முத்துகோபால், 41, கூறினார்.
இத்தகைய பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை என்பதை உணர்த்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுலாவில் பங்குகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இந்நிறுவனத்தின் தொண்டூழிய மருத்துவரான டாக்டர் அஸ்வின் வாரியர் கூறினார்.
"பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்குத் தேவைப்படும் அதே மன வலிமையும் ஆலோசனைகளும் பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் வேண்டும்.
"அதனாலேயே முழுமையான அணுகுமுறையாக மொத்த குடும்பத்திற்குமே இயன்றவரை பல சேவைகள் வழங்கி வருகிறோம்," என்று இந்நிறுவனத்தின் தலைவரும் குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் சஷிகுமார் கணபதி கூறினார்.
கிளப் ரெயின்போ அறப்பணி அமைப்பிற்கு நன்கொடையளிக்க விரும்புபவர்கள் https://www.clubrainbow.org/take-action இணையத்தள முகவரியை நாடலாம்.

