ஆ. விஷ்ணு வர்தினி
சீனப் புத்தாண்டை வரவேற்பதற்கு ஏற்ற இல்ல வசதிகளை அமைத்து தந்து, வசதி குறைந்த 86 வயது திரு சியூ சியோ யின்னுக்கு கைகொடுக்க முனைந்துள்ளது, ஜாமியாவின் 'புரோஜெக்ட் ஹேப்பினஸ்' செயல்திட்டம்.
தாருல் இஸ்லா எனப்படும் ஜாமியா மறுவாழ்வு இல்லத்தின் குடியிருப்பாளர்களும் முன்னாள் 'இஸ்லாகேர்' திட்ட உறுப்பினர்களும் (IslahCare Alumni) தனியாக வாழும் திரு சியூவின் ஈரறை இல்லத்துக்குச் சென்று, ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை புத்தொளி கூட்டி, களையை ஏற்படுத்தினர்.
திரு சியூ தனது வீட்டுக்கென ஆசைப்பட்ட ஒற்றைப் படுக்கை, கூரை விளக்குடனான மின்விசிறி, கூரை விளக்குகள், புதிய சோபா முதலிய அறைகலன்களைப் பொருத்தி ஜாமியா மறுவாழ்வு இல்லவாசிகள் உதவினர்.
அதோடு, அவரின் வீட்டுக்குச் சாயம் பூசவும் சுத்தப்படுத்தி செப்பனிடவும் அவர்கள் அயராது உதவிக்கரம் நீட்டினர்.
புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவு பெற்றுள்ள திரு சியூவின் இல்லத்தை அவரிடமே ஒப்படைக்க, நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் நேற்று வருகை புரிந்திருந்தார்.
தாருல் இஸ்லா குழுவினர், சீனப் புத்தாண்டு மட்டுமன்றி நோன்புப் பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் என பல்வேறு பண்டிகைகளின் போதும் வசதி குறைந்தோர் விழாக்காலத்தை இன்பமாக கொண்டாடுவதற்கு ஆதரவளிக்கின்றனர்.
கடந்த நான்காண்டுகளாக அமலாக்கம் கண்டு வந்துள்ள 'புரோஜெக்ட் ஹேப்பினஸ்' திட்டம், வசதி குறைந்தோரை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது.
விழாக்காலத்தை முன்னிட்டு, அவர்கள் தத்தம் இல்லங்களுக்காக ஆசைப்படுபவற்றைப் பூர்த்தி செய்து அந்தக் குழு உதவி வருகின்றது.
இதன் மூலம், வசதி குறைந்தோர் மனநிறைவுடன் விழாக்களைக் கொண்டாடுவதற்கு அது வழி செய்கிறது.

