தேடப்பட்டு வந்தவர்
தாய்லாந்தில் கைது
ஓங் ஜியான் ஸென், 21, என்பவர், ஏமாற்றியது தொடர்பான குற்றச்சாட்டையும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி இருந்தார். ஏமாற்று விவகாரம் ஒன்றில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் மீது 2021 அக்டோபர் 8ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது.
அவரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. 2021 அக்டோபர் 15ஆம் தேதி பிணையில் அவர் வெளியே வந்தார். ஏமாற்றியது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நீதிமன்றத்திற்கு அவர் வரவேண்டி இருந்தது. ஆனால் வரவில்லை. தொடர்ந்து அவரைக் கைது செய்ய அடுத்த நாளன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரியவந்தது.
இந்நிலையில், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்ததாகக் கூறி அந்நாட்டு அதிகாரிகள் சென்ற ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி ஓங்கை கைது செய்தனர். அது பற்றி சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு 2022 நவம்பர் மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய்லாந்தில் ஓங்கிற்குப் பிணை அனுமதிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி ஓங் தப்பிவிட்டார். அவரைக் கைது செய்ய கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடைசியாக ஜனவரி 12ஆம் தேதி பேங்காக்கில் கூட்டுரிமை அடுக்கு வீடு ஒன்றில் 28 வயது தாய்லாந்து பெண்ணுடன் ஓங் பிடிபட்டார். போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.
தேசிய சேவையாளர்கள்
இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த இரண்டு முழு நேர தேசிய சேவையாளர்கள், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் சட்டவிரோத கணினிப் பயனீட்டுச் சட்டத்தின்கீழ் அவர்கள் குற்றம் புரிந்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரான லான்ஸ் கார்ப்பரல் நிசார் சித்திக் இஸ்மாடி, 21, என்பவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவருடைய கூட்டாளி என்று கூறப்படும் கார்ப்பரல் முகம்மது இஸ்கந்தர் முகம்மது அன்சாரி, 23, என்பவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிசாரைப் பொறுத்தவரை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் பிப்ரவரி 17ஆம் தேதி நடக்கும். அதற்குப் பத்து நாள்களுக்குப் பிறகு இஸ்கந்தர் குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

