சீனப் புத்தாண்டையொட்டி நேற்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
கொவிட்-19 தொற்று தலைகாட்டியதிலிருந்து முதன்முதலாக இந்த ஆண்டுதான் கட்டுப்பாடுகள் அகன்று முழுவீச்சில் பழையபடி பொது வரவேற்பு இடம்பெற்றது.
மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்தானாவில் 17,554 பார்வையாளர்கள் குழுமி இருந்தனர்.
சென்ற ஆண்டு சீனப் புத்தாண்டு பொது வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 3,000 பேரே வருகையளித்தனர். அப்போது கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.
மேடைக்கலை நிகழ்ச்சிகள், இஸ்தானா சுற்றுலா, உணவு வண்டிகள் எதுவும் அப்போது இல்லை. 2021ல் சிறிய அளவில்தான் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பராமரிப்புச் சேவை வழங்குவோர் உள்ளிட்ட 18 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மேடைக்கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதிபர் ஹலிமா யாக்கோப், தன் கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹாப்ஷியுடன் கலந்துகொண்டார்.
இஸ்தானா பிரதான கட்டடத்தை பலரும் சுற்றிப் பார்த்தனர். சிங்கப்பூரின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க அன்பளிப்புகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இஸ்தானா திடலில் உள்ள தாவர, விலங்குகளைத் தேசிய பூங்காக் கழக தொண்டூழியர்கள் வருகையாளர்களுக்குச் சுற்றி காட்டி விளக்கினர்.

