திருமதி சுதா ரவி, புத்தாக்க வடிவில் 26,000 பாப்ஸ்சிக்கல் குச்சிகளைக் கொண்டு ஒரு மாதமாக திட்டமிட்டு, பாடுபட்டு ஆறு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் அகலம் கொண்ட வண்ண ரங்கோலியை உருவாக்கி அதைச் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
தமிழ் அறிஞர்களான திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் முகங்களைச் சித்திரிக்கும் வகையில் உருவான இந்த ரங்கோலி, சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சுதா ரவியின் நான்காவது படைப்பாகும்.
ரங்கோலியிலும் தமிழர் பாரம்பரிய விழுமியங்களிலும் தன்னுடைய 17 வயது மகள் ரக்ஷிதா ரவியை அறிமுகப்படுத்திய சுதா ரவி, மகளின் ஆதரவோடு இந்தக் கண்ணைப் பறிக்கும் ரங்கோலியைப் படைத்தார்.
தமிழ் இலக்கியத்தை ஆடல், பாடல் மூலம் ஊக்குவிக்கும் கலாமஞ்சரி எனும் அமைப்பு, லிஷா ஆதரவில் ஏற்பாடு செய்திருந்த 'எண்ணமும் வண்ணமும்' எனும் கலை நிகழ்ச்சியில், இந்த ரங்கோலி பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
தைத் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 21ஆம் தேதி தேக்கா பிளேஸில் நடந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் முதலாம் செயலாளர் திரு டி. பிரபாகர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ரங்கோலி படைப்புக்கு அரிசி மாவு, சாப்ஸ்டிக் குச்சிகள் போன்றவற்றை இதற்கு முன்னர் பயன்படுத்திய சுதா ரவி, இம்முறை புதுமையாக அக்ரிலிக் எண்ணெய் ஓவிய வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
ரங்கோலியை ரசித்ததுமின்றி, கலாமஞ்சரியின் வயலின், மிருதங்கக் கலைஞர்கள், பாடகர்களின் இசை, பாடல், அறிஞர்களின் கவிதைகளை மையப்படுத்தி அரங்கேறிய கர்நாடக இசை மழையிலும் பார்வையாளர்கள் நனைந்தனர்.
"நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய நிகழ்ச்சிகளைப் படைத்துக்கொண்டு வரும் எங்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருமைக்குரிய ஒன்று.
"என் நெருங்கிய தோழி சுதா ரவியின் மகள் ரங்கோலி இடுவதில் இணைந்தது, நம் இளைய தலைமுறையினர் தமிழர் பண்பாட்டை எடுத்துச் செல்வார்கள் என்பதற்கான ஒரு சான்றாகும்," என்றார் கலாமஞ்சரி அமைப்பின் நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வைரவன்.
ஒவ்வொரு கலாமஞ்சரி நிகழ்ச்சியையும் தவறாமல் பார்வையிடும், திருமதி ரஜினி அசோகன், 55, இந்த ரங்கோலி பிரமிக்கவைக்கும் அளவில் மிக அழகானதாகவும் தமிழர் கலாசாரத்திற்குப் பெருமை அளிப்பதாகவும் உள்ளது என்று தமிழ் முரசிடம் கூறினார்.
வங்கியில் பணிபுரியும் திருமதி சுதா ரவி, "இரவு பகல் பாராமல் நானும் என் மகளும் உருவாக்கிய இந்த ரங்கோலி எங்களுக்குப் பேரளவில் பெருமை சேர்த்துள்ளது. மேன்மேலும் நாங்கள் புதுமையான ரங்கோலிகளைப் படைக்க முனைந்துள்ளோம்." என்றார்.

