திரு எட்வின் சுவா, 35, சிங்கப்பூர் ஆயுதப் படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
அவரின் மனைவியான டாக்டர் கிளாரி லோ, 33, உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்.
கடந்த 2014ல் திருமணமான இத்தம்பதிக்கு அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், தங்கள் குடும்பம் பெரிய குடும்பமாகத் திகழ வேண்டும் என்பது கொள்ளை ஆசை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளாக பிள்ளைகள் பிறக்கவில்லை. தம்பதியர் செயற்கை இனப்பெருக்க முறைகளை நாடினர்.
இந்நிலையில், இத்தம்பதிக்கு இயற்கையான முறையில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கெய்த் என்ற அந்த மகனுக்கு இப்போது வயது இரண்டு.
இதனிடையே, செயற்கை இனப்பெருக்க முறை மூலம் உறையவைக்கப்பட்ட கருமுளை ஒன்றைப் பயன்படுத்தி இரண்டாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்ற ஆண்டு மே மாதம் இத்தம்பதியர் முடிவு செய்தனர்.
அதன்படி டாக்டர் லோ கருவுற்றார். ஆறு மாத கர்ப்பிணியாக அவர் இருந்தபோது தன் வயிற்றில் இரட்டை பிள்ளைகள் வளர்வது அவருக்குத் தெரியவந்தது.
அந்த மாது 168 செ.மீ. உயரம் உள்ளவர். எடை 52 கிலோதான், தன்னால் இரண்டு பிள்ளைகளை வயிற்றில் சுமந்து பிரசவிக்க முடியுமா என்று அவர் பயந்துவிட்டார்.
இந்நிலையில், அவர் வயிற்றில் மொத்தம் மூன்று பிள்ளைகள் வளர்வது பிறகு தெரியவந்தது. கடைசியாக ஜனவரி 3ஆம் தேதி கேகே மருத்துவமனையில் அவருக்குப் கேரத், கென்னத், சேத் என்ற மூன்று ஆண் பிள்ளைகள் ஒரு நிமிட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக பிறந்தன.
அப்போது அந்தப் பெண்மணி 34 வாரக் கர்ப்பிணி.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தன. அதிக பிள்ளைகள் வேண்டும் என்று ஆசைப்பட்ட சுவா-லோ தம்பதிக்குப் புத்தாண்டில் அடித்தது யோகம்.
பொதுவாக கருமுளை ஒன்றில் இருந்து மூன்று குழந்தைகள் உருவாவதென்பது மிகவும் அரிதானது என்பதால் அதிர்ஷ்டத்திலும் பேரதிர்ஷ்டம் அடித்து இருப்பதாக தம்பதியர் மகிழ்கிறார்கள்.
அதிக பிள்ளைகள் வேண்டும்; குடும்பம் பெரிதாக இருக்க வேண்டும் என்ற இந்தக் குடும்பத்தின் கனவு நனவாகி இருக்கிறது.

