கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் புகார் தெரிவித்து இருப்போரிடம் இருந்து தகவல்களைத் திருட போலி மின்னஞ்சல்கள் மூலம் மோசடிக்காரர்கள் முயல்கிறார்கள்.
தாங்கள் செய்திருக்கும் புகார்கள் பற்றிய மேல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மூன்றாம் தரப்பு இணையத்தளம் ஒன்றுக்குச் செல்லும்படி அந்த மோசடிக்காரர்கள் புகார் தெரிவித்தவர்களிடம் சொல்கிறார்கள்.
கேஸ் அமைப்பிடம் தாக்கலாகி இருக்கும் புகார்களுக்கான அல்லது கோரிக்கைகளுக்கான எண் என்று சொல்லி ஒரு போலி எண்ணை மின்னஞ்சல் மூலம் மோசடிக்காரர்கள் அனுப்புகிறார்கள்.
அதோடு, அத்தகைய மின்னஞ்சல்களில் உரையாடுவதற்கான ஓர் அடையாளமும் இருக்கிறது.
அதன் வழி மூன்றாம் தரப்பு இணையத்தளத்திற்குச் சென்று மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் மோசடிக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
புகார் தெரிவித்தவர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல விவரங்களும் அந்த மூன்றாம் தரப்பு இணையத்தளத்தில் இருப்பதாகவும் மோசடிக்காரர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய போலி மின்னஞ்சல்களில் கேஸ் அமைப்பின் சின்னமும் இருக்கிறது.
மோசடிக்காரர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் "odoo@compueconomicos.com", "wilson@v3.sg", and "bhm200025@sdh.sg" போன்ற முகவரிகளுக்குச் செல்லும்படி பயனீட்டாளர்களைக் கேட்டுக்கொள்கின்றன.
இந்த விவரங்களைத் தெரிவித்த கேஸ் அமைப்பு, இந்த முகவரிகள் தனக்குத் தொடர்பில்லாதவை என்று கூறியது.
கேஸ் அமைப்பிற்கு ஜனவரி 21 முதல் புகார்கள் வந்ததாக அதன் நிர்வாக இயக்குநர் லீ சியாவ் ஹுவி அறிக்கை ஒன்றில் கூறினார்.
மோசடிக்காரர்கள் பற்றி கேஸ் அமைப்பு தன்னுடைய இணையத்தளத்திலும் ஃபேஸ்புக்கிலும் ஜனவரி 22ஆம் தேதி பல அறிவிப்புகளை விடுத்து பயனீட்டாளர்களை எச்சரித்தது.
அதோடு மட்டுமன்றி, பயனீட்டாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி இந்த அமைப்பு அவர்களை விழிப்பூட்டியது.
கேஸ் அமைப்பின் தகவல் தொழில்நுட்ப முறை மிக பாதுகாப்பாக இருக்கிறது என்றும் திருவாட்டி லீ கூறினார்.
மேல் விசாரணை நடந்து வருவதாகவும் இந்த விவகாரம் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
போலியான மின்னஞ்சல்களைப் பெறுவோர் அதை நம்பி செயல்படக்கூடாது. தனிப்பட்ட விவரங்களைத் தரக் கூடாது என்று அவர் அறிவுரை கூறினார்.
அத்தகைய மின்னஞ்சல்கள் யாருக்காவது வந்திருந்தால் அவர்கள் 9795 8397 என்ற எண் மூலம் கேஸ் அமைப்புடன் தொடர்புகொள்ளலாம்.
அல்லது dataprotection@case.org.sg முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

