சிங்கப்பூரில் குறுஞ்செய்திகள் அனுப்பும் எல்லா அமைப்புகளும் சிங்கப்பூர் குறுஞ்செய்தி அனுப்புவோர் அடையாளப் பதிவேட்டில் பதிந்துகொள்ள வேண்டும் என்று தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருக்கிறது.
அப்பதிவேட்டில் பதிந்துகொள்ளாத அமைப்புகள் அனுப்பும் குறுஞ்செய்திகள், பெறுநரின் கைப்பேசிகளில் இது மோசடியாக இருக்கக்கூடும் என்ற எச்சரிக்கையுடன் தோன்றலாம். வரும் 31ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும். சிங்கப்பூரில் பரவலாக இருக்கும் மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்களைக் கூடுதலாகப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இது மோசடியாக இருக்கக் கூடும் என்று வகைப்படுத்தப்பட்ட குறுஞ்செய்திகள் மின்னஞ்சல் கணக்கில், தேவையின்றி பெறும் மின்னஞ்சல்களுக்கான குப்பைத்தொட்டி (ஸ்பேம்) கோப்புபோன்று இயங்கும். அதனால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட குறுஞ்செய்திகளைப் பெறுவோர், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதைப் பற்றி குழப்பமாக இருந்தால், குடும்பத்தார், நண்பர்களைக் கேட்டு சரிபார்த்துக்கொள்ளப் பொதுமக்களை ஆணையம் ஊக்குவித்தது.
பெரும்பாலும் பிரபலமான பெரிய நிறுவனங்கள், இலக்கங்களும் எழுத்துகளும் அடங்கி இருக்கும் அடையாள எண்ணிலிருந்து குறுஞ்செய்திகளை அனுப்பும். இத்தகைய நிறுவனங்கள் விரைந்து பதிவேட்டில் பதிந்துகொள்ள வேண்டும் என்று ஆணையம் கூறியது.
ஜனவரி நிலவரப்படி, 2,600க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி அடையாள எண்களைக் கொண்டிருக்கும் 1,200க்கும் அதிகமான நிறுவனங்களும் அமைப்புகளும் பதிவேட்டில் பதிந்துகொண்டுள்ளன. நிதி நிறு வனங்கள், மின் வர்த்தகத் தளங்கள், பொருள் விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
மோசடிகளுக்கு எதிரான பல முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக ஆணையம் கூறியது.
2022 மார்ச் மாதம் சிங்கப்பூர் குறுஞ்செய்தி அனுப்புவோர் அடையாளப் பதிவேடு தொடங்கப்பட்டது. அதுமுதல், 2021ன் இறுதி காலாண்டிலிருந்து 2022ன் இரண்டாம் காலாண்டு வரை குறுஞ்செய்திகளின் மூலம் நடைபெறும் மோசடிகள் 64 விழுக்காடு குறைந்தன.

