இந்த சீனப் புத்தாண்டில் அதிகமானோர் மின்னிலக்க 'சிவப்பு உறைகளை' (ஹொங் பாவ்) பயன் படுத்தியுள்ளனர். வசதிக்காகவும் அதிர்ஷ்டமான இலக்கத்தில் அன்பளிப்புகளை வழங்கவும் அதிக வாடிக்கையாளர்கள் மின்னிலக்கத்தில் அன்பளிப்புத் தொகையை மாற்றினர் என்று வங்கிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
எடுத்துக்காட்டாக, டிபிஎஸ் வங்கி அதன் 'கியூஆர்' அன் பளிப்பு அட்டைகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30% அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியது.
இந்த அட்டைகளைப் பெறுவோர் அதிலுள்ள 'கியூஆர்' குறியீட்டை வருடி, அளிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு 'கியூஆர்' அன் பளிப்பு அட்டைகளில் ஏற்றப்பட்ட தொகை கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளும் புத்தாண்டின் முதல் நாளிலும் கிட்டத்தட்ட $5 மில்லியன் 'கியூஆர்' அன் பளிப்பு அட்டைகளில் ஏற்றப்பட்டதாக டிபிஎஸ் வங்கி குறிப்பிட்டது.
2021ஆம் ஆண்டின் அதே இரண்டு நாட்களுடன் ஒப்பிடும்போது இது 55 விழுக்காடு அதிக மாகும். சிவப்பு உறைகளை மின்னிலக்க முறையில் தயாரிப்பதும் விநியோகிப்பதும் எளிமையாக இருப்பதால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையிலும் இதற்கு வரவேற்பு இருப்பதாக டிபிஎஸ் வங்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி டயான் சாங் கூறினார்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளில் தனது மின்னிலக்க அன்பளிப்பின் அன்றாட பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்ததாக ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
முந்தைய ஆண்டைவிட இந்த சீனப் புத்தாண்டு காலத்தின் 15 நாட்களில் குறைந்தது 20 விழுக்காடு கூடுதலாக மின்னிலக்க அன்பளிப்பு அனுப்பப்படும் என்று ஓசிபிசி வங்கி மதிப்பிடுகிறது.
யுஓபி வங்கியில், சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளிலும் புத்தாண்டின் முதல் நாளிலும் மின்னிலக்க சிவப்பு உறைகள் மூலம் அனுப்பப்பட்ட அன்பளிப்புத் தொகையின் மொத்த மதிப்பு ஆண்டு அடிப்படையில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று அந்த வங்கி தெரிவித்தது.
புதிய நோட்டுகள், பாரம் பரிய சிவப்பு உறைகளைப் பயன்படுத்துவதைவிட வாடிக்கையாளர்கள் மின்னிலக்க சிவப்பு உறைகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக பார்க்கிறார்கள். மேலும் அவர்களால் $8.88, $88 போன்ற அதிர்ஷடமான தொகைகளையும் எளிதாக பரிசளிக்க முடிவதாக யுஓபி வங்கிக் குழுவின் தனிப்பட்ட நிதிச் சேவைகள் பிரிவின் தலைவர் ஜாக்குலின் டான் கூறினார்.

