பொருள் சேவை வரி அண்மையில் உயர்வதற்கு முன்னர் இருந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துவந்தபோதும் விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் விலைக்கு அளவு கோலான பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 86.56 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
இது 2022 நவம்பருக்குப் பின்னர் அதன் ஆகக் கூடிய விலையாகும். சீனா பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால், அங்கு பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் இவ்வாண்டு எண்ணெய் விலை உயர்ந்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதே வேளையில், சீனா கச்சா எண்ணெய்யை கூடுதலாக இறக்குமதி செய்து வருவதால் சிங்கப்பூரில் எண்ணெய், டீசல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விலை குறையும் என்று கருதப்படுகிறது.
கால்டெக்ஸ், ஷெல், எஸ்பிசி ஆகிய நிறுவனங்கள் சீனப் புத்தாண்டுக்கு முன்னர் எண்ணெய் விலையை லிட்டருக்கு மூன்று காசிலிருந்து ஐந்து காசு வரை குறைத்தன. கேஸ் எனப்படும் சிங்கப்பூர் வாடிக்கையாளர் சங்கத்தின் ஃபியுல் காக்கி எண்ணெய் விலை கண்காணிப்புத் தளம் அதைத் தெரிவித்தது.
சினோபெக் நிறுவனத்தில் டீசல் விலை லிட்டருக்கு $2.63. கால்டெக்ஸ், எஸ்ஸோ, எஸ்பிசி ஆகியவை 92-ரக பெட்ரோலை லிட்டருக்கு $2.65ஆக விற்று வருகின்றன. எஸ்பிசியிலும் வேறு சில நிறுவனங்களிலும் 95-ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு $2.69 ஆக உள்ளது.

