பாலர்பள்ளித் துறையில் ஆசிரியர்களின் நலனையும் வேலைச் சூழலையும் மேம்படுத்த மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில பாலர் பள்ளிகள் மும்முரமாக ஆசிரியர்களை வேலையில் சேர்க்க முயன்று வருகின்றன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பாலர் பள்ளி நடத்துநரான மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளை (பிசிஎஃப்) ஸ்பார்க்கல்டோட்ஸ் அவற்றில் ஒன்றாகும். தீவு முழுவதும் உள்ள அதன் 360 பாலர்பள்ளிகளில் சுமார் 40,000 பாலர்கள் பயில்கின்றனர்.
கடந்த 2022 டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து 2023 மே 31 வரை வேலையில் சேரும் புதிய பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு பிசிஎஃப் $5,000 போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
மேலும், தங்கள் குடும்பத்தார், நண்பர்களை நிறுவனத்தில் ஆசிரியர்களாக சேர பெயர் கொடுப்பவர்களுக்கான ஊக்கத்தொகை டிசம்பரில் 50 விழுக்காட்டிலிருந்மு 60 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டது.
அத்துடன், தனது அனைத்து பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பணியாளர்களுக்குமான சம்பளத்தை பிசிஎஃப் உயர்த்தியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற பாலர்கல்வி டிப்ளோமா பட்டயப் படிப்பை முடித்துவிட்டு பிசிஎஃப்பில் வேலையில் சேர்பவர்களுக்கு குறைந்தது $2,800 சம்பளம் வழங்கப்படும்.
அரசாங்க உதவிபெற்ற அனைத்து பாலர்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சம்பளம் அடுத்த ஈராண்டுகளில் 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை உயரும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் 23,000க்கும் அதிகமான பாலர் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். வரும் 2025க்குள் மேலும் 3,500 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தாம் மும்முரமாக ஊழியர்களை வேலையில் சேர்க்க முயற்சி செய்யப்போவதாகவும் இந்த வட்டார நாடுகளிலிருந்து பாலர்பள்ளி ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கப்போவதாகவும் பிசிஎஃப் கூறியுள்ளது.
22 பாலர்பள்ளிகளை நடத்தும் ஸ்கூல்ஸ்ஃபோர்கிட்ஸ் பிரீஸ்கூல்ஸ் நிறுவனம், ஆசிரியர்களை வேலையில் சேர்த்து வருகிறது.
குறிப்பாக வேறு துறையிலிருந்து பாலர்கல்விக்கு மாறும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களை ஈர்க்க அது முனையும்.

