சிங்கப்பூரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பத்து ஆண்டு களுக்கு மேல் தங்கியிருந்த இரு பெண்களுக்கு நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த இருவரும் எம்பிளாய்மெண்ட் பாஸ் ரத்து செய்த பிறகும் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருந்தனர்.
வெய் ஜியான்சின், 56, சென் மெய், 44 ஆகிய இருவரும் குடிநுழைவுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை நேற்று நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இம்மாதம் 9ஆம் தேதி பிடோக் நார்த் ரோட்டில் உள்ள வீவக வீட்டில் இருவரையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர்.
அப்போது, சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கவில்லை என்பதற்கான ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியவில்லை.
வெய்க்கு 2007 ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஓராண்டு வேலை செய்ய எம்பிளாய்மெண்ட் பாஸ் வழங்கப்பட்டது. சென்னுக்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்ற 2009 ஜூலை 17ஆம் தேதியிலிருந்து எம்ப்ளாய்மெண்ட் பாஸ் கொடுக்கப்பட்டது. வெய்யின் வேலை அனு மதிச் சீட்டு, 2007 செப்டம்பர் 27ஆம் தேதியன்றும் சென்னின் வேலை அனுமதிச் சீட்டை 2009 ஆகஸ்ட் 5ஆம் தேதியன்றும் மனிதவள அமைச்சு ரத்து செய்தது.
ஆனால் அதையும் மீறி வெய் 15 ஆண்டு, மூன்று மாதம், 13 நாட்களும் சென் 13 ஆண்டு, ஐந்து மாதங்கள், நான்கு நாட்களும் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.
அவர்களுடைய அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டதற் கான காரணம் நீதிமன்ற ஆவ ணங்களில் தெரிவிக்கப்பட வில்லை.

