சிங்கப்பூர் காவல் படையில் பணியாற்றிய முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட சக ஊழியரின் கோப்புகளை வேலையிட கணினியில் சட்டவிரோதமாக ஆராய்ந்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் அமிருடின் ஷா ஸைனல், சக ஊழியர் கைவிலங்கிட்டுள்ள படத்தை படம்பிடித்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.
நண்பரைக் கேலி செய்யும் விதமாக அமிருடின் பின்னர் எட்டு வினாடி காணொளி ஒன்றையும் பதிவு செய்து, தான் பிடித்த படத்தின் பின்னணியில் டிக்டாக் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
ஏமஸ் லீ ஸென் என்ப வருடன் காவல் உடையில் இருக்கும் அந்தக் காணொளி யை அமிருடின் பதிவு செய்திருந்தார்.
அதில் இருவரும் தங்களுடைய கைகளைக் காட்டி, சிங்கப்பூரில் பதின்ம வயது குண்டர் கும்பல் பற்றிய படத்தில் வரும் '15' பாடலுக்கு ஏற்ப உதட்டை அசைத்திருந்தனர்.
இந்தக் காணொளியை பின்னர் வாட்ஸ்அப்பில் மற்றொரு குழுவிடமும் அவர் பகிர்ந்துஉள்ளார். நேற்று அமிருடின், 23, கணினியை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய ஒரு குற்றச் சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. இந்த வழக்கில் லீயின் தொடர்பு பற்றியோ சக ஊழியர் கைது செய்யப்பட்ட விவரமோ நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

