நோன்புப் பெருநாளை முன்னிட்டு கேலாங் சிராய் வட்டாரம் வரும் மார்ச் 17 முதல் களைகட்டவுள்ளது. வருடாந்திர ரமலான் சந்தை கிட்டத்தட்ட 700 கடைகளுடன் தொடங்கவுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 70ஆக இருந்தது.
சந்தை துவங்கும் நாளும் நோன்பு மாதம் தொடங்கும் நாளும் முந்தைய ஆண்டுகளில் ஒன்றாக அமைந்திட, இவ்வாண்டு புது மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இம்முறை நோன்பு மாதம் தொடங்குவதற்கு ஐந்து நாள்கள் முன்னதாகவே கேலாங் சிராயின் நோன்புப் பெருநாள் ஒளியூட்டுடன் ரமலான் சந்தையும் தொடங்கவுள்ளது.
சந்தை 36 நாள்களுக்கு ஏப்ரல் 21ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சந்தை தினமும் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரை செயல்படும். இருப்பினும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் ஏப்ரல் 22ஆம் தேதியன்று மட்டும் சந்தை அன்று காலை 6 மணி வரை இடம்பெறும். இது தொடர்பில் உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆக அதிக நாள்களுக்கு நீடிக்கும் சந்தையாக இது அமைந்திடும் என்று அவர் தெரிவித்தார்.
வருகையாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் பொருள்களைக் கிடைக்கச் செய்வதே முக்கியம் எனக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தை நடைபெறும் நாள்களுக்கு சில்லறை வர்த்தகக் கடைகள் $15,000 வரை வாடகையையும் உணவு பானக் கடைகள் $19,000 வரை வாடகையையும் செலுத்துவதை எதிர்பார்க்கலாம் என்று சந்தையை நடத்தும் குழுமத்தைச் சேர்ந்த திரு முகம்மது முஸ்தபா ஷா ஜெஹான் கூறினார். இத்துடன் 'விஸ்மா கேலாங் சிராய்' பகுதியில் உள்ளூர் தொழில்முனைவர்களுக்காக ஓர் இடம் ஒதுக்கப்படும் என்றும் அங்குள்ள கடைக்கான ஒருநாள் வாடகை $55 என்றும் அவர் தெரிவித்தார்.
ஆடைகளையும் ஹலால் உணவுப் பொருள்களையும் நன்கொடை அளிக்க விரும்புவோருக்காகவும் இடம் ஒதுக்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக இணைப் பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
"மக்கள் 2023ன் சந்தையை மறக்க முடியாத வகையில் இனிமையான அனுபவங்களைப் பெறவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்," என்றார் அவர்.

