தனியார், பொதுச் சொத்துகளுக்கான உரிமைப் பத்திரங்கள் தற்போது காகித வடிவில் உள்ள நிலையில், இச்செயல்முறையை முழுமையாக மின்னிலக்கமயமாக்கும் திட்டத்தை சிங்கப்பூர் நில ஆணையம் வகுத்துள்ளது.
'மின்னிலக்க சொத்துரிமைத் தளம்' (டிசிபி) என்ற இந்தத் திட்டம் குறித்து முதன்முதலில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து, இந்த மின்னிலக்கத் தளத்துக்கான பணிகள் 2026ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னிலக்கத் தளத்தை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தும் பொறுப்பு, 'டெக் மகிந்தா'விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற உலகளாவிய கப்பல் போக்குவரத்துத் துணைக்கோளத் திட்டப் புத்தாக்க சவால் விருது நிகழ்ச்சியில் திரு டோங் தெரிவித்தார்.
தற்போதைய செயல்முறையின் படி பரிவர்த்தனைகள் முடிவடைய சுமார் 8 முதல் 12 வாரங்கள் ஆகின்றன. இன்னமும் 70% ஆவணங்கள் காகித வடிவில் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
'டிசிபி' திட்டம் குறித்து முதன்முதலில் 2019ல் பரிந்துரைக்கப்பட்டது.

