தடுப்பூசிக் காய நிதி உதவித் திட்டத்தின் மூலம் 413 பேருக்கு வழங்குதொகை

2 mins read
13e20019-3a8c-4b8a-b5c0-3d4faa67e776
-

தடுப்­பூ­சிக் காய நிதி உத­வித் திட்­டத்­தின் வழி­யாக மொத்­தம் 413 பேர் தங்­க­ளின் வழங்­கு­தொகை­யைப் பெற்­றுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை 2021 ஆண்­டி­று­தி­யில் 296ஆக இருந்­தது. திட்­டத்­தின் கீழ் விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு இது­வரை மொத்­தம் $1,895,000 வழங்­கப்­பட்­டுள்­ளது, அல்­லது வழங்­கு­வதா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை அடுத்து இறப்பு அல்­லது நிரந்­தர இய­லா­மைக்கு ஆளா­னோ­ருக்கு முதல் அடுக்கு வழங்­கு­தொ­கை­யாக $225,000 அளிப்­ப­டு­கிறது. இது­வரை, மூன்று விண்­ணப்­ப­தா­ரர்­கள் இதற்­குத் தகு­தி­பெற்­றுள்­ள­னர். திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற, தேசிய கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தின் கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர், நிரந்­த­ர­வாசி அல்­லது நீண்­ட­கால தங்­கும் விசா பெற்ற அட்­டை­தா­ர­ராக இருக்க வேண்­டும்.

அத்­து­டன் மருத்­து­வர் மதிப்­பீட்­டின் படி, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஒரு­வ­ருக்­குக் கடு­மை­யான பக்க விளைவு, மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெறும் நிலை, தொடர்ச்­சி­யா­கத் தன் ஆற்­றலை இழந்த நிலை அல்­லது இய­லாமை, அல்­லது உயி­ரி­ழப்பு ஆகிய சூழல்­கள் நேர்ந்­தி­ருந்­தால் திட்­டத்­தின் கீழ் வழங்­கு­தொகை பெறு­வ­தற்கு அவர் விண்­ணப்­பிக்­க­லாம்.

முன்­ன­தாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை தாதி­யர் ஒரு­வர் தமது இரண்­டா­வது கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டதை அடுத்து, அவ­ருக்­குக் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டது. இத­னால் அவர் 151 நாள்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் இருந்­தார். சக்­கர நாற்­கா­லி­யில் நட­மாட வேண்­டிய நிலை­யும் எந்­நே­ர­மும் உட­லுக்­குள் பிரா­ண­வாயு செலுத்­தப்­பட வேண்­டிய நிலை­யும் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

இருப்­பி­னும், அவர் இத்­திட்­டத்­தின் கீழ் இது­வரை விண்­ணப்­பிக்­க­வில்லை என்று சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.