இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
மிகக் குறைவான வாடிக்கையாளர் எண்ணிக்கை, காலியாகக் கிடந்த கடைகள் ஆகிய காரணங் களால் அந்த உணவங்காடி நிலையத்தை நடத்திய நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதை மூட முடிவெடுத்தது.
இந்நிலையில், அந்த உணவங்காடி நிலையத்தில் உணவுக்கடைகள், வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கான இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று கூறியது. மக்கள் கழகத்துடன் இணைந்து பூன் லே, நன்யாங், பைனியர் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் ஆய்வு நடத்திய பிறகு, இந்த மாற்றங்களைச் செய்ததாக வாரியம் தெரிவித்தது.
சந்தைக் கடைகளுக்குப் பதிலாக உணவுக்கடைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானோர் கூறியதை அடுத்து, ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையத்தில் சமைத்த உணவுகளை விற்கும் கடைகளின் எண்ணிக்கை 34லிருந்து 39ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அந்த உணவங்காடி நிலையத்தில் 479 இருக்கைகள் இருந்ததாகவும் இனி 580 இருக்கைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கெடுத்தவர்களில் ஏறத்தாழ 55 விழுக்காட்டினர், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையம் மூடப்பட்டதற்கு முன்பு குறைந்தது ஒருமுறையாவது அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த உணவங்காடி நிலையம் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 61ல் அமைந்துள்ளது.
உணவுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், இதற்கு முன்பு அங்கிருந்த 14 சந்தைக் கடைகள் திறக்கப்படாது.
தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை அருகில் உள்ள பேரங்காடிகள் அல்லது வேறு சந்தைகளிலிருந்து வாங்க விரும்புவதாக ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 95 விழுக்காட்டினர் கூறியதை அடுத்து, அந்தக் கடைகள் திறக்கப்படவில்லை.
இதற்கு முன்பு அந்த உணவங்காடி நிலையத்தை நடத்திய கோஃபு குழுமம் அதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. 2019ஆம் ஆண்டிலிருந்து 50 விழுக்காடு கடைகள் மட்டுமே இயங்கியதால் வியாபாரம் லாபகரமாக இல்லாமல் போக, உணவங்காடி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த அந்நிறுவனம் விரும்பவில்லை. ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையம் 2017ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையம் புதுப்பிக்கப்படும் என்று வாரியம் நேற்று தெரிவித்தது. தற்போது நிலையத்தின் முன்பகுதியில் இருக்கும் மின்படிகள், படிக்கட்டுகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.
தரைத்தளத்தில் கூடுதல் கடைகளைத் திறக்க இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தரைத்தளத்தில் உணவுக்கடைகள் திறக்கப்பட்டால் அவ்விடத்தில் உணவங்காடி நிலையம் இருப்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
உணவங்காடி நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தின் நுழைவாயிலும் வெளியேறும் இடமும் மாற்றியமைக்கப்படும். கூடுதல் கடைகளைத் திறக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 72லிருந்து 49ஆக குறையும்.
புதுப்பிக்கப்படும் ஜூரோங் வெஸ்ட் உணவங்காடி நிலையத்தை ஜேடபிள்யு 50 ஹாக்கர் ஹெரிட்டேஜ் ஏற்று நடத்த இருக்கிறது. $4.86 மில்லியன் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டது.

