மறுவிற்பனை வீட்டு விலை 11வது காலாண்டாக கூடியது

மறுவிற்பனை வீட்டு விலை 11வது காலாண்டாக கூடியது

3 mins read
14ff2680-7547-4872-ac03-4e4ac89ecc7d
-

வீவக தகவல்: 2022 கடைசிக் காலாண்டில் 2.3% கூடியது; இதர காலாண்டுகளைவிட குறைவு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து 11வது காலாண்டாக அதிகரித்து இருக்கிறது.

விலை உயர்வு மெதுவடைந்து இருந்தபோதிலும் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்த போதிலும் வீட்டின் விலை கூடி இருக்கிறது.

மறுவிற்பனை வீட்டு விலை சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் 2.3% கூடியது.

இந்த அதிகரிப்பு, சென்ற ஆண்டின் 3வது காலாண்டில் 2.6% ஆக இருந்தது. கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.

சென்ற ஆண்டிலேயே கடைசி காலாண்டில்தான் விலை அதிகரிப்பு குறைவாக இருந்தது என்பதைக் கழகம் சுட்டிக்காட்டியது.

சென்ற ஆண்டு முழுமைக்கும் மறுவிற்பனை விலை 10.4% அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 2021ல் 12.7% ஆக இருந்தது.

வட்டி விகிதம் கூடியது; சொத்துச் சந்தையை மட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் நடப்புக்கு வந்தன. இந்தச் சூழலில் வீடுகளை வாங்குவோர் அதிக விலையைக் கொடுக்க தயாராக இல்லை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதன் காரணமாகவே விலை உயர்வு குறைந்து இருப்பதாக சொத்துத் துறை பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் மொத்தம் 6,597 வீவக வீடுகள் கைமாறின. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் 7,546 வீடுகளாக இருந்தது. கணக்கிட்டு பார்க்கையில், கடைசி காலாண்டில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 12.6% குறைந்து இருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் மொத்தம் 7,940 மறுவிற்பனை வீடுகள் கைமாறின. இதனுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 16.9% குறைந்து இருக்கிறது.

மொத்தமாக பார்க்கையில் சென்ற ஆண்டு முழுமைக்கும் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் மொத்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட 10.1% குறைவாக இருந்தது.

சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலையுள்ள 93 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் 111 ஆக இருந்தது.

சென்ற ஆண்டு முழுமைக்கும் கைமாறிய $மில்லியன் வீடுகள் மொத்தம் 370. இது ஒரு சாதனை என்று கழகம் தெரிவித்து இருக்கிறது.

இந்த எண்ணிக்கை, 2021ல் 259ஆக இருந்தது. சென்ற ஆண்டு கைமாறிய மறுவிற்பனை வீடுகளில் 1.3% வீடுகள் மில்லியன் வெள்ளி வீடுகளாகும்.

புக்கிட் மேரா முதிர்ச்சிஅடைந்த பேட்டையில் உள்ள ஐந்தறை வீடுதான் சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் மிக அதிக விலைக்குக் கைமாறியது என்று கழகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதற்கு அடுத்த நிலையில் பீஷான் வீடுகள் இருக்கின்றன.

வீவகவின் மறுவிற்பனை வீட்டுச் சந்தையைப் பார்க்கையில், சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் அதிக வீடுகள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை 56,647 வீடுகளாக இருந்தது. முந்தைய காலாண்டில் இந்த எண்ணிக்கை 56,372.

வீவக வீட்டை வாடகைக்கு விடலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை சென்ற காலாண்டில் 3.5% அதிகரித்து 8,476 ஆக இருந்தது. குவீன்ஸ்டவுனில் ஐந்தறை வீட்டுக்கான மாத வாடகை சராசரியாக $4,200 என்ற அளவில் ஆக அதிகமாக இருந்தது. இந்த வாடகை முந்தைய காலாண்டில் $3,600.

இதனிடையே, இந்த ஆண்டில் 23,000 பிடிஓ வீடுகள் வரை விற்பனைக்கு விடப்போவதாக கழகம் ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது.

தேவைக்கேற்ப வீடுகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கப் போவதாகவும் அது தெரிவித்து இருக்கிறது. கழகம் அடுத்த மாதம் சுமார் 4,400 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விடும். அந்த வீடுகள் ஜூரோங் வெஸ்ட், காலாங் வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா போன்ற துணை நகர்களில் அமையும்.

பிடோக், காலாங் வாம்போ, குவீன்ஸ்டவுன், சிராங்கூன், தெங்கா போன்ற துணை நகர்களில் வரும் மே மாதம் 3,800 முதல் 4,800 வீடுகள் வரை விற்பனைக்கு விடப்படும்.