ஜோகூர் பாருவில் முஸ்தஃபா
சிங்கப்பூரில் பிரபலமான முஸ்தஃபா செண்டர் ஜோகூர் பாருவில் அதன் கிளையைத் திறக்கவுள்ளது. புதிய கிளை தம்போய் வட்டாரத்தில் விரைவில் திறக்கப்பட விருக்கும் கேப்பிட்டல் வோர்ல்ட் மால் கடைத்தொகுதியில் அமைந்திருக்கும்.
இதுவே முஸ்தஃபா செண்டர் நிறுவனத்தின் முதலாவது மலேசியக் கிளை என்று அதன் உரிமையாளர் முஸ்தாக் அகம்மது தெரிவித்தார். இந்தப் புதிய கிளையும் கேப்பிட்டல் வோர்ல்ட் மால் கடைத்தொகுதியும் இவ்வாண்டின் பிற்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வீட்டு விலை சென்ற காலாண்டில் 0.4% கூடியது
சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் கூடியது. என்றாலும் அந்த அதிகரிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக இருந்தது.
விற்பனை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாகக் குறைந்தது. பெரிய அளவில் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது; அடமான விகிதம் கூடியது; சொத்துத்துறை கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன; பொருளியல் மெதுவடைந்தது. இந்தச் சூழலில் விற்பனை குறைந்தது.
தனியார் வீட்டு விலை கடைசிக் காலாண்டில் 0.4%தான் கூடியதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. இந்த அதிகரிப்பு, மூன்றாவது காாண்டில் 3.8% ஆக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் விலை 3.5% கூடியது.
இதற்கு முன் 2020 முதலாவது காலாண்டு வளர்ச்சி 1% ஆகக் குறைந்து இருந்தது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில்தான் குறைவு அதிகமாக இருந்தது.
தனியார் வீட்டு விலை, சென்ற ஆண்டு முழுமைக்கும் 8.6% அதிகரித்தது. அந்த அதிகரிப்பு 2021ஆம் ஆண்டில் 10.6% ஆக இருந்தது.
பெட்ரோல் நிலையங்களில் விற்பனை விலை உயர்வு
சிங்கப்பூரில் சீனாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தவிர இதர நிறுவனங்கள் பெட்ரோல் சில்லறை விற்பனை விலையை உயர்த்தி இருக்கின்றன.
கால்டெக்ஸ், எஸ்ஸோ, ஷெல் ஆகியவை, லிட்டருக்கு ஐந்து காசு வரை விலையைக் கூட்டி உள்ளன. கால்டெக்ஸ்தான் முதன்முதலாக கடந்த புதன்கிழமை விலையை அதிகரித்தது.
என்றாலும் சினோபெக், எஸ்பிசி ஆகிய சீனாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் நேற்றுக் காலை வரை விலையைக் கூட்டவில்லை. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு US$85க்கும் US$88க்கும் இடைப்பட்ட அளவில் சீராக இருந்து வருகிறது என்றாலும் நிறுவனங்கள் சில்லறை விற்பனை விலையை அதிகரித்துள்ளன.
சீன நிறுவனங்கள் விலையை அதிகரிக்காமல் இருப்பது பற்றி கருத்து தெரிவித்த எண்ணெய்த் தொழில்துறை வல்லுநரும் ஆலோசகருமான ஓங் எங் டோங், சீனாவில் மின்கலன் வாகனங்கள் படுவேகமாக அதிகரித்து வருவதால் சீனாவில் எண்ணெய் உபரியாக இருக்கும்போல் தெரிகிறது என்றார். சீன அரசாங்கம் 2023ல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி வரம்பை 46% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 கடைசிக் காலாண்டில் அலுவலக வாடகை 5.1% கூடியது
சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் உள்ள அலுவலக இட வாடகை, சென்ற ஆண்டு மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், நான்காவது காலாண்டில் 5.1% கூடியது.
இந்த அதிகரிப்பு, 2022 மூன்றாவது காலாண்டில் 2.1% ஆகத்தான் இருந்தது. மத்திய வட்டாரத்தில் சென்ற ஆண்டு முழுமைக்கும் வாடகை 11.7% கூடியது.
இந்த அதிகரிப்பு 2021ல் 1.9% ஆக இருந்தது. நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரிய வருகின்றன.
நாடளாவிய அளவில் பார்க்கையில், சென்ற ஆண்டு முடிவுவாக்கில், மொத்தம் சுமார் 872,000 சதுர மீட்டர் தரை பரப்பளவு உள்ள அலுவலக இடம் கிடைக்க இருந்தது.
இது அதற்கு முந்தைய காலாண்டின் அளவான 858,000 சதுர மீட்டர் இடப் பரப்பை விட அதிகம். சென்ற ஆண்டின் 4வது காலாண்டின் முடிவில் காலியாக இருந்த அலுவலக இட விகிதம் 11.3% ஆகக் குறைந்தது. இது முந்தைய காலாண்டில் 11.7% ஆக இருந்தது.
அலுவலக இட வாடகை கூடியது என்றாலும் மத்திய வட்டாரத்தில் சில்லறை வர்த்தக இட வாடகை, 2022 கடைசிக் காலாண்டில் 1.1% குறைந்தது.
இந்தக் குறைவு மூன்றாவது காலாண்டில் 0.4% ஆகத்தான் இருந்தது.
மத்திய பகுதியில் சில்லறை வர்த்தக இட வாடகை சென்ற ஆண்டு முழுமைக்கும் 2.4% குறைந்தது. இந்தக் குறைவு 2021ல் 6.8% ஆக இருந்தது.


