சிராங்கூன் ரோடு-கிச்சனர் ரோடு சந்திப்பில் உள்ள ஆறு கடைவீடுகள் $62.5 மில்லியனுக்கு விற்பனை

சிராங்கூன் ரோடு-கிச்சனர் ரோடு சந்திப்பில் உள்ள ஆறு கடைவீடுகள் $62.5 மில்லியனுக்கு விற்பனை

2 mins read
a8991d83-be16-4205-ad41-74746536edc1
-

சிராங்கூன் ரோட்டில் எண் 322-332 வரைப்பட்ட இரண்டு மாடி கடைவீடுகள் $62.5 மில்லியனுக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டன.

சிராங்கூன் ரோடு-கிச்சனர் ரோடு சந்திப்பில் அமைந்திருக்கும் இந்தக் கடைவீடுகள் 'ஃபேரர் பார்க்' பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளன.

சிட்டி ஸ்குவேர், சென்ட்ரியம் ஸ்குவேர் ஆகிய கடைத்தொகுதி களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்தக் கடைத்தொகுதிகளில்இருந்து நடந்து செல்லும் தூரத்தில் 'முஸ்தஃபா சென்டர்', 'பார்க்ராயல்', 'ஹாலிடே இன்', 'ஃபேரர் பார்க்' மருத்துவமனை போன்ற வசதிகள் அமைந்துள்ளன.

அதோடு, பழமை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இந்தச் சொத்து வகைப்படுத்தப்படாததால் வருங்காலத்தில் சொத்தை ஆறு மாடிக் கட்டடமாக விரிவாக்கம் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

முதல் குடியிருப்புச் சொத்துக்குப் பின்பு வாங்கக்கூடிய அனைத்து குடியிருப்புச் சொத்துகளுக்கும் செலுத்தவேண்டிய 'எபிஎஸ்டி' எனும் கூடுதல் முத்திரை வரியை, இந்த வர்த்தக சொத்தை வாங்குபவர் செலுத்த தேவையில்லை.

'எஸ்எஸ்டி' எனும் விற்பனையாளருக்கான முத்திரை வரியையும் விற்பனையாளர் செலுத்த தேவையில்லை. இவை எல்லாம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக 'புரோப்நெக்ஸ் ரியல்ட்டி' முதலீடு, விற்பனைப் பிரிவின் தலைவர் டிரேசி கோ கூறினார்.

அந்த நிறுவனம், ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வரை 27,125 சதுர அடி மொத்த பரப்பளவைக் கொண்ட இவற்றை விற்பனைக்கு விட்டது.

இச்சொத்து, 'ஃபிரீஹோல்ட்' எனப்படும் முற்றுரிமை சொத்தா கும். இதுபோன்ற சொத்துகளைப் பெறுவோர் சொத்து இருக்கும் நிலத்திற்கும் உரிமையாளர் ஆவர். 99 அல்லது 999 ஆண்டுகளுக்கு உரிமை வழங்கும் 'லீஸ்ஹோல்ட்' சொத்துகளிலிருந்து இவை வேறுபட்டவை.

இந்தக் கடைவீடுகளின் தரைத்தளத்தில் 'ஏபிசி நாசி கந்தார் உணவு நிலையம், சீன உணவகங்கள் போன்ற இதர உணவகங்களும் இரண்டாம் மாடியில் பொழுதுபோக்கு கேளிக்கை நிறுவனங்களும் குத்தகையின் கீழ் இயங்கி வருகின்றன.

பொருளியல் நிச்சயமில்லாத நிலை, அதிகரித்து வரும் வட்டி விகிதம் ஆகியவை சொத்துச் சந்தையைப் பாதித்தாலும் கூடுதல் முத்திரை வரி இல்லாததால் கடைவீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிலங்கள் உள்ளிட்ட வர்த்தக சொத்துத் துறை முதலீட்டாளரை தொடர்ந்து ஈர்க்கும் என தான் எதிர்பார்ப்பதாக திருவாட்டி கோ கூறினார்.