குழந்தை கண்காணிப்பு நடைமுறை: கேகே மருத்துவமனை உறுதி

குழந்தை கண்காணிப்பு நடைமுறை: கேகே மருத்துவமனை உறுதி

2 mins read
2f4d3f75-25d7-41c0-b200-e293e5eff74f
-

கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் 2021 ஏப்ரல் மாதம் பிறந்து 11 நாள்கள் ஆன ஒரு குழந்தை, மூளைக்குப் போதிய ரத்தம் போகாததால் மரணம் அடைந்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய நடைமுறைகளை அந்த மருத்துவமனை மறுபரிசீலனை செய்தது. இப்போது அதன் சிசு பராமரிப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படும் பிள்ளைகள் உடலில் உயிர்நாடியான ஒவ்வோர் அறிகுறியையும் அந்த மருத்துவமனை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து பதிந்து வருகிறது.

மருத்துவமனையில் அந்தக் குழந்தை பிறந்ததற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்தக் குழந்தையின் உடலில் உயிர்நாடியான இயக்கங்கள் எப்படி இருந்தன என்பது பதியப்படவில்லை. இதனை அந்தக் குழந்தையின் மரணத்தை விசாரித்த மரண விசாரணை அதிகாரி தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இது பற்றி அந்த மருத்துவமனையுடன் தொடர்புகொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரம் கேட்டது.

அதற்குப் பதிலளித்த அந்த மருத்துவமனையின் மருந்துத் துறைத் தலைவர் இணைப் பேராசிரியர் சான் யோக் ஹுவீ, மரண விசாரணை அதிகாரியின் தீர்ப்பை தொடர்ந்து இந்த மருத்துவமனை பிள்ளைகளின் உயிர்நாடியான உறுப்புகளின் அங்க அசைவுகளைத் தொடர்ந்து கவனித்து அவற்றைப் பதியும் நடைமுறையைப் பலப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

"அந்தக் குழந்தை மரணத்தை அடுத்து, சிறப்பு பராமரிப்பு வார்டில் சேர்க்கப்படும் பிள்ளைகளைக் கண்காணிக்கும் எங்களுடைய நடைமுறையை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.

"இதன்படி பிள்ளைகளின் உயிர்நாடியான உறுப்புகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு பதியப்படுகின்றன.

"ஊழியர்கள் எப்போதுமே அந்த வார்டில் இருப்பார்கள்.

"குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றமோ வழக்கத்திற்கு மாறான நிலையோ காணப்பட்டால் உடனடியாக அவர்கள் அது பற்றி உரிய இடத்திற்குத் தெரிவித்துவிடுவார்கள்," என்று அவர் மேலும் விளக்கினார்.

கேகே மருத்துவமனை தனது பராமரிப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது நடைமுறையைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்துவர உறுதிபூண்டு இருக்கிறது என்றும் பேராசிரியர் சான் குறிப்பிட்டார்.

குழந்தை மரணம் பற்றி விசாரித்த அரசாங்க மரண விசாரணை அதிகாரி, மரணத்தில் சூது ஏதும் இல்லை என்றும் அந்தப் பிள்ளை இயற்கையான காரணங்களால் மரணம் அடைந்ததாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

மூளைக்குப் போதிய ரத்தம் செல்லாததால் மூளை செயல்படுவதற்குத் தேவையான உயிர்வாயு கிடைக்காமல் போய்விட்டது. இதுவே மரணத்திற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.