வீட்டு விலை ஏறிவிட்டது. வட்டி விகிதம் கூடிவிட்டது. இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு இரண்டு பக்கமும் அடி என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
'ரேடாஸ்' எனும் சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர் சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இரண்டு சுற்று நடவடிக்கை எடுத்திருந்ததை சுட்டிக் காட்டினார்.
வருமானத்துக்கும் இதர அடிப்படை அம்சங்களுக்கும் தொடர்பு இல்லாத வீட்டு விலை உயர்வை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர், உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் அதிக வீடுகள் விநியோகிக்கப்பட்டாலும் வீட்டு விலை மிதமிஞ்சிய அளவில் இருப்பதாகத் தெரிவித்தார்.
தனியார், மறுவிற்பனை வீடு களுக்கான தேவை வலுவாக இருப்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.
"வீட்டுக் கடனை வாங்கியவர்கள் மாதந்தோறும் அதிகம் கட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அடமான வட்டி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது," என்றார் அவர்.
அடமான வட்டிவிகித ஏற்ற இறக்கத்தை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் சோரா எனும் குறியீடு கடந்த ஆண்டு 0.2 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காட்டுக்கு உயர்ந்தது.
வட்டி விகிதம், நிலை பெறு வதற்கு முன்பு அடுத்து வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அவர் எச்சரித்தார்.
இருந்தாலும் வீட்டு விலை உயர்வு நான்காவது காலாண்டில் மெதுவடைந்துள்ளது.
வீட்டுப் பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. அதே வேளை யில் பொது குடியிருப்பு வீடுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது.
கடந்த 2022ல் 23,000 வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
அதே ஆண்டில் அரசாங்க நில விற்பனையின்கீழ் 6,300 தனியார் வீடுகளும் விற்பனைக்கு வந்தன.
இவ்வாண்டு முதல் பாதியில் மேலும் 4,100 வீடுகள் விற் பனைக்கு வரவிருக்கின்றன.
இதற்கிடையே ரேடாஸின் புதிய தலைவரான டான் சுவீ இயோவ், தனது முதல் உரையில் சொத்து நிறுவனங்கள் உட்பட பல வர்த்தகங்களுக்கு கடந்த சில ஆண்டுகள் சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் வட்டி விகிதம், கூடி வரும் பணவீக்கம், உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள இடையூறு கள் ஆகியவற்றால் உலகளாவிய வளர்ச்சி மெதுவடைந்து வரு வதாக அவர் கூறினார்.

