செந்தோசா கோவில் உள்ள தனது பாரடைஸ் ஹைலண்ட் வீட்டில் இரண்டு பணிப்பெண் களைத் துன்புறுத்திய வழக்கில் 58 மாதுக்கு பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மாது கூறியுள்ளார்.
டான் லீ ஹுன், 58, தனக்கு காலுறை அணிவித்த பணிப்பெண்ணை, தவறாக அணிவித்த தாகக் கூறி கோபத்தில் எட்டி உதைத்துள்ளார். மற்றொரு பெண்ணை அவர் கிள்ளியிருக்கிறார். செல்வி ஜோன் லோஸரெஸ் லிஸார்டோ, செல்வி ஜெனிஃபர் வேகஃபிரியா அரங்கோட் ஆகிய இரு பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் எட்டு குற்றச்சாட்டுகளிலும் நொவினா மெடிகல் சென்டரின் இயக்கு நராகவும் செயலாளராகவும் இருந்த டான் மேல்முறையீடு கோரியுள்ளார்.
மாவட்ட நீதிபதி சலினா இஷாக், லிஸார்டோவுக்கு 2,500 வெள்ளியும் செல்வி அரங்கோட்டுக்கு 5,100 வெள்ளியும் இழப்பீடாக வழங்க டானுக்கு உத்தரவிட்டார்.
சென்ற டிசம்பரில் தாக்கப்பட்ட ஏழு சம்பவங்களில் டான் குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்த நீதிபதி, எல்லா பணிப்பெண்களும் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள், அடைந்த துன்பத்துக்காகவும் வலிக்காகவும் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இருந்தாலும் செல்வி லிஸார்டோவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலிருந்து டானை நீதிபதி விடுவித்தார். இதனால் அவர் மீது மீண்டும் அதே குற்றத்தை சுமத்த முடியாது.
ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், டான் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
துணை அரசுத் தரப்பு வழக் கறிஞர்களான குமரேசன் கோகுலபாலன், இங் ஜுன் சோங் ஆகியோர் சமர்பித்த ஆவணங்களில் டானின் கணவர் சிம் குவான் ஹுவாட் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியாகத் தெரி கிறது.
2018 செப்டம்பரில் நடந்த ஐந்து சம்பவங்களில் செல்வி அரங்கோட்டின் வயிறு, மார்பு, கால்களில் டான் கிள்ளியிருக்கிறார். லிஸார்டோவை அவர் எட்டி உதைத்துள்ளார்.
"குற்றவாளி தாக்கியதால் பணிப்பெண்ணுக்கு வலி ஏற்பட்டுள்ளது. குற்றவாளிக்கு குனிந்து காலுறை அணிவித்தபோது அவரது தலையிலும் தாக்கப்பட்டுள்ளார்," என்று நீதிபதி குறிப்பிட்டார். "வலிக்கும் அளவுக்கு செல்வி லிஸார்டோ எட்டி உதைக்கப்பட்டுள்ளார். ஐந்து நாள்களுக்குப் பிறகும் அவருக்கு வலி இருந்தது," என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
காவல்துறைக்கு யார் தகவல் கொடுத்தார்கள் என்பது நீதிமன்ற ஆவணங்களில் தெரி விக்கப்படவில்லை.
டானின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் அறிக்கையை மட்டும் பெற்றுச் சென்றனர்.
"லிஸார்டாவோ, அரங்கோட்டோ காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ஏன் காவல்துறையினர் வீட்டுக்கு வந்தனர் என்பதும் அவர்களுக்குத் தெரியாது," என்று அரசாங்க வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
டான் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
எந்தப் பணிப்பெண்ணையும் தாக்கியதோ, துன்புறுத்தியதோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். டானை $15,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


