கொவிட்-19 கிருமித்தொற்று போதைப்பொருள் கடத்தல் பாணியை மாற்றி இருக்கிறது. அதிகளவில் போதைப்பொருளைக் கடத்தி வருவதில் இப்போது கடத்தல்காரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
சென்ற ஆண்டு மே, செப்டம்பர் மாதங்களில் 18 கிலோகிராம் ஹெராயின், 13 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மூலம் தெரியவருகிறது.
சிங்கப்பூருக்கு போதைப்பொருளை விநியோகிப்பதில் கடத்தல்பேர்வழிகள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் தெரிவித்தார்.
போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஆலோசனைக் கட்டமைப்புத் (A3) தொண்டூழியர்கள், பங்காளிகள் கலந்துகொண்ட பாராட்டு விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.
இக்கட்டமைப்பின் 800க்கும் மேற்பட்டதொண்டூழியர்களின் சேவையையும் அர்ப்பணிப்பையும் அக்கறையையும் அங்கீகரிக்கும் முறையில் அந்நிகழ்ச்சி நடந்தது.
சட்டத்தை ஏமாற்றி, பொதுமக்களையும் அவர்களது குடும்பங்களையும் கெடுத்து தாங்கள் சுகமாக வாழ தொடர்ந்து கடத்தல்காரர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதைப்பொருள் ஐஸ் மாத்திரையாக இருக்கிறது.
2021ல் போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் கைதானவர்களில் 60 விழுக்காட்டினர் இந்த மாத்திரையைப் பயன்படுத்தினார்கள் என்று இணைப் பேராசிரியர் தெரிவித்தார். இந்த வட்டாரத்தில் இது அதிகம் கிடைக்கிறது என்று இணைப் பேராசிரியர் கூறினார்.
சிங்கப்பூர் முக்கியமான போக்குவரத்து மையமாக இருக்கிறது. இடைவழி இடமாக பல கும்பல்களும் சிங்கப்பூரை பயன்படுத்த முயல்கின்றன என்றார் அவர்.
2021ல் ஒரு பில்லியனுக்கும் அதிக ஐஸ் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 172 டன் ஐஸ் மாத்திரைகள் பிடிபட்டன. போதைப்பொருள் பயனீடு, விற்பனை, விநியோகத்தில் பதின்ம வயதினர் ஈடுபடுவது கவலை தருகிறது என்றாரவர்.
ஹாங்காங்கின் போதைப்பொருள் தொடர்பான தலைமைத்துவ பயிலகம் என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் குழு, ஹாங் காங்கில் போதைப்பொருள் புழக்கத்தைத் தவிர்க்க மாணவர்கள் எடுத்துவரும் முயற்சியை விளக்கி கூறிய அங்கமும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
ஊடகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விளக்கக்காட்சியை போதைப் புழக்கத்திற்கு எதிரான தேசிய மன்றம் நேற்றைய நிகழ்ச்சியில் அரங்கேற்றியது.
A3 கட்டமைப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டூழியராக சேவையாற்றிவரும் வெங்கடேஷ் நலமதி, 34, போதைப்பொருளால் பாதிக்கப்பட்ட தன் நண்பர் ஒரு வரைப்போல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் இந்த தொண்டை ஆற்றி வருவதாகக் கூறினார்.

