சிங்கப்பூரில் நாற்பது ஆண்டு களுக்கு முன் செந்தோசாவுக்குச் சென்று வர இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று படகு, மற்றொன்று கம்பி வண்டி. கம்பி வண்டி, மவுண்ட் ஃபேபரில் இருந்து புறப்பட்டு செந்தோசாவில் இருக்கும் கார்ல்டன் ஹில் நிலையத்திற்குச் செல்லும். அங்கிருந்து இங்கு வரும்.
கடந்த 1983ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி செந்தோசாவுக்கும் பிரதான தீவுக்கும் இடையில் 15 வண்டிகள் கம்பியில் தொங்கியபடி சென்று வந்து கொண்டு இருந்தன. எண் 26 என்ற வண்டியில் ஜக்ஜித் சிங் என்ற 8 வயது சிறுவன், தன் குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருடன் மவுண்ட் ஃபேபருக்குத் திரும்பிக்கொண்டு இருந்தான். அப்போது மாலை மணி 6 இருக்கும்.
பனாமாவில் பதியப்பட்ட 'இன்விடோக்' என்ற எண்ணெய்த் துரப்பணக் கப்பல், அந்த நேரத்தில் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்றது. வழியில் கப்பலின் கோபுரப் பகுதி, கம்பி வண்டியின் கம்பி வடத்தை அறுத்துவிட்டது.
இரண்டு வண்டிகள் 55 மீட்டர் கீழே கடலில் விழுந்துவிட்டன. ஒரு வண்டியில் யாரும் இல்லை. இரண்டாவது வண்டியில் இருந்த ஐவரும் மாண்டனர்.
சிறுவன் ஜக்ஜித் சிங் இருந்த வண்டி குலுங்கியது. அவரின் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கடலில் விழுந்தனர். சிறுவனின் வளர்ப்புத் தந்தையான மகிந்தர் சிங், 42, பாட்டியான பிரித்தம் கோர், 60, இருவரும் மாண்டனர். அவர்களுடன் கடலில் விழுந்த இரண்டு வயது குழந்தை மீட்கப்பட்டது.
ஜக்ஜித் சிங்கிற்கு இப்போது வயது 48. கடலில் விழுந்து மீட்கப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை தஸ்விந்தர் சிங்கிற்கு இப்போது வயது 42.
திரு ஜக்ஜித் சிங், அந்தச் சம்பவம் இன்னமும் அப்படியே தன் கண்முன்னே தெரிவ தாகக் கூறினார்.
பயம், பதற்றம் மனச்சோர்வு பாதிப்பு இன்னமும் இவரைப் பிடித்து ஆட்டுகிறது. அதை மறக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சி படைப்பாளராக இவர் செயல்படுகிறார்.

