தேசிய அளவிலும் உலக அரங்கிலும் 'ஸ்குவாஷ்' விளையாட்டில் பெயர் பதித்து வரும் வீராங்கனை ஸ்நேஹா சிவக்குமார். ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் தான் பயின்ற நாள்களைப் பற்றி கேட்டபோது மிகவும் ஆர்வத்துடன் தன் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார் இவர்.
"இந்தப் பள்ளி எனது ஒட்டுமொத்த திறனையும் வளர்த்தது. எங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதை அடையாளம் கண்டு அதில் தொடர்வதற்குப் பல்வேறு பாடங்களின் மூலம் வாய்ப்புகள் கிடைக்க உதவியது," என்கிறார் இவர்.
பள்ளிக்கு வெளியே இடம்பெற்ற 'ஸ்குவாஷ்' போட்டிகளில் பங்கேற்றதால் பல வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் போனபோதும் அனைவரது ஆதரவும் இவர் படிப்பில் சிறந்து விளங்க உதவியதாக இவர் குறிப்பிட்டார்.
தமிழ்மொழி வகுப்புகள் எப்போதும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் நகைச்சுவை கலந்தும் இருந்ததாக இவர் நினைவுகூருகிறார்.
சிறு வயதிலிருந்தே ஸ்குவாஷ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்நேஹா, ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி தனது திறமையை அங்கீகரித்துப் தனக்கு நிரம்பிய ஆதரவளித்ததாகக் கூறுகிறார். தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தான் தவறவிட்ட பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க உதவியது, பள்ளிச்சூழல். அத்துடன் பள்ளியின் 'ஸ்குவாஷ்' குழுவும் மிக வலுவாக இருந்தது. இதனால் போட்டிகளில் ஸ்நேஹா வெற்றிபெற முடிந்ததாகக் கூறுகிறார். பள்ளி வலியுறுத்தும் விழுமியங்களின்படி, மக்கள் நலனை முன்னிலைப்படுத்துவதும் ஆர்வத்துடன் செயல்படுவதிலும் ஊக்கம் அளிக்கப்படுகின்றன.
அத்துடன் அந்த விழுமியங்கள், தொழில்முறை மற்றும் கொள்கை ரீதியானவை. இதனால் சமூகத் திறன்களைப் பெறுதல், நேரத்தை சரியாக ஒதுக்கீடு செய்வது எப்படி போன்றவை மேம்படும் என்பதை இவர் உணர்ந்தார்.
புதிய அனுபவங்களில் ஈடுபடவும் புதியனவற்றில் தன் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் தொழில் ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறியவும் பள்ளிக் காலம் இவருக்கு உதவியது. மேலும், திறந்த மனத்துடன் எதையும் அணுக வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டதாக இவர் தெரிவிக்கிறார்.
விளையாட்டுகள் தொடர்பில் உபகாரச் சம்பளம், விளையாட்டில் பதக்கங்களையும் பெற்றுள்ள ஸ்நேஹா, தனது ஏழாவது வயதிலிருந்தே ஸ்குவாஷில் ஆர்வம் கொண்டிருந்ததால் தன் பள்ளி வாழ்க்கையையும் விளையாட்டு வாழ்க்கையையும் சமநிலையில் வைத்துப் பார்த்தார். ஒருவர் அதிகம் மனவுளைச்சல் கொள்ளும் அளவிற்குச் செயல்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் பிறரிடம் உதவி கேட்கத் தயங்கக்கூடாது என்றும் சொல்கிறார் இவர்.
"வென்றாலும் தோற்றாலும் சிறந்த விளையாட்டாளரே வெற்றிபெறுவார். விளையாட்டுத் தளத்தில் கடினமாக முயற்சி செய்வது முக்கியம். நமக்கு எதிரே விளையாடும் விளையாட்டாளர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். விளையாடும்போது நேர்மையுடன் விளையாட வேண்டும்," என விளையாட்டுப் போட்டிகளில் இருக்கவேண்டிய மனப்பான்மையை விளக்கிக் கூறுகிறார் ஸ்நேஹா.

