மின்னிலக்க, பசுமைப் பொருளியலில் ஒத்துழைப்பை அதிகப்படுத்த உடன்பாடுகள்
சிங்கப்பூரும் மலேசியாவும் மின்னிலக்கப் பொருளியலிலும் பசுமைப் பொருளியலிலும் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் வாய்ப்புகளை சேர்ந்து பயன்படுத்திக்கொள்ளவும் இணங்கி இருக்கின்றன.
அதோடு மட்டுமன்றி கணினித் தகவல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் அணுக்கமாகச் சேர்ந்து செயல்படவும் அவை இணங்கி இருக்கின்றன.
இவற்றை உள்ளடக்கும் வகையில் மூன்று உடன்பாடுகள் நேற்று கையெழுத்திடப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் கலந்துகொண்டனர்.
மலேசியாவின் 10வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு திரு அன்வார் முதன்முதலாக அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று சிங்கப்பூருக்கு வருகையளித்தார்.
முன்னதாக சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் மலேசியப் பிரதமரும் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வரும் மனமுவந்த உறவை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இப்போது உடன்பாடுகள் கையெழுத்தாகி இருக்கின்றன.
சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சுக்கும் மலேசியாவின் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சுக்கும் இடையில் கையெழுத்தான இரண்டு உடன்பாடுகள் மின்னிலக்கப் பொருளியலிலும் பசுமைப் பொருளியலிலும் ஒத்துழைக்க வகைசெய்கின்றன.
மின்னிலக்கப் பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு ஆசியானுக்கு இடையில் அதிக மின்னிலக்கப் பொருளியல் ஒத்துழைப்பு இடம்பெறவும் ஊக்கவிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சுக்கும் மலேசியாவின் தொடர்பு, மின்னிலக்க அமைச்சுக்கும் இடையில் மூன்றாவது உடன்பாடு கையெழுத்தானது.
தனிப்பட்ட கணினித் தகவல்களைப் பாதுகாப்பது, இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கப் பொருளியல் ஆகிய துறைகளில் ஒத்துழைக்க இந்த உடன்பாடு வகை செய்கிறது.
வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், மலேசியாவின் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் இருவரும் மின்னிலக்கப் பசுமைப் பொருளியல் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் மலேசியாவின் தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸிலும் மூன்றாவது உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
சிங்கப்பூருக்கு வருகையளித்த மலேசியப் பிரதமருக்கு முன்னதாக இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அதிபர் ஹலிமாவைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பை அடுத்து மலேசியப் பிரதமர் சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்தார்.
திரு அன்வாருக்கு பிரதமர் திரு லீ பகல் விருந்தளித்துச் சிறப்பித்தார்.
நேற்றுக் காலையில் பிரதமர் அன்வார், அவருடைய மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் ஆகிய இருவரின் பெயர்கள் ஆர்க்கிட் மலர் ஒன்றுக்குச் சூட்டப்பட்டன.
மலேசியப் பிரதமருடன் அந்த நாட்டின் அமைச்சர்கள் பலரும் உடன் வந்திருந்தனர்.

