எம்ஆர்டி நிலையம், சுரங்கப்பாதை அமைக்க $562மி. ஒப்பந்தம்: 40,000 குடும்பங்கள் நன்மை அடையும் வகையில் நீட்டிப்பு திட்டம்

எம்ஆர்டி நிலையம், சுரங்கப்பாதை அமைக்க $562மி. ஒப்பந்தம்: 40,000 குடும்பங்கள் நன்மை அடையும் வகையில் நீட்டிப்பு திட்டம்

2 mins read
a3045d55-2bce-4e2b-a439-ff265d5d2b0c
-

குறுக்குத் தீவு ரயில் வழித்தடத்தை பொங்கோல் வரை நீட்டிப்பதற்கான திட்டத்தில் கடைசி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கி உள்ள அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு $562 மில்லியன். இலியாஸ் எம்ஆர்டி நிலையத்தையும் 7.3 கி.மீ. தூரத்துக்குச் செல்லும் அந்த நீட்டிப்பு சுரங்கப்பாதையையும் கட்டும் பணி இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கும்.

அதில் பயணிகள் சேவையை 2032ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சிஇஎஸ்_எஸ்டிசி மற்றும் சிம் எங் செங் கான்ட்ராக்டர்ஸ் (1988) என்ற நிறுவனங்களுக்கு அந்த ஒப்பந்தம் ஒரு கூட்டுத் தொழிலின் ஒரு பகுதியாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொன்றும் 1.4 கி.மீ. நீளம் வரை செல்லக்கூடிய ஒரு ஜோடி சுரங்கப்பாதைகளை அமைக்க நில துரப்பண இயந்திரம் பயன்படுத்தப்படும்.

அந்தப் பாதைகள் இலியாஸ் நிலையத்தையும் பாசிர் ரிஸ் நிலையத்தையும் இணைக்கும்.

அந்தச் சுரங்கப்பாதையின் ஆக அதிக ஆழமான பகுதி பூமி மட்டத்திற்குக்கீழே சுமார் 50 மீட்டர் ஆழத்தில் அமையும்.

இலியாஸ் நிலையம் பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் பூமிக்குக்கீழே சுமார் 40 மீட்டர் ஆழத்தில் அமைந்து இருக்கும். அதற்கு ஐந்து நுழைவு வாயில்கள் இருக்கும்.

பொங்கோல் நீட்டிப்பு வழித்தடத்தில் நான்கு நிலையங்கள் அமைந்து இருக்கும். பொங்கோல், ரிவேரா, இலியாஸ், பாசிர் ரிஸ் ஆகியவை அந்த நான்கு நிலையங்கள். அவற்றில் மூன்று நிலையங்கள் முனையங்களாக இருக்கும்.

பொங்கோல் நீட்டிப்புத் திட்டத்தின் மூலம் 40,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.

பாசிர் ரிஸ், தெம்பனிஸ் நார்த் போன்ற கிழக்குப் பகுதிகளிலும் பொங்கோல், செங்காங் போன்ற வடகிழக்குப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இதனால் பலனடைவார்கள்.

இந்த நீட்டிப்பு வழித்தடம் செயல்படும்போது இலியாஸ் நிலையத்தில் இருந்து ஹவ்காங்கிற்கு 20 நிமிடங்களில் வந்துவிடலாம். இப்போது இதற்கு 40 நிமிடங்கள் பிடிக்கின்றன.