வெற்றிகரமான முறையில் மூப்படைவதற்கான 2023 செயல்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
அந்தத் திட்டத்தை மூப்படைதல் தொடர்பான அமைச்சர்நிலை குழு தொடங்கி இருக்கிறது. அந்தக் குழுவிற்குச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தலைமை வகிக்கிறார்.
சிங்கப்பூர் மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது. நினைவாற்றல் இழப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடுகிறது.
அத்தகைய ஒரு குறைபாட்டைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் நினைவாற்றல் மருந்தகங்கள், 23 பலதுறை மருந்தகங்களில் 16ல் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவாற்றல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள முதியோரை அடையாளம் கண்டு அவர்களை மதிப்பிடுவதற்காக அனுப்பிவைக்கும் 'கிரஸ்ட்' என்ற சமூக ஈடுபாட்டுக் குழுக்களின் எண்ணிக்கையைச் சுகாதார அமைச்சு அதிகரிக்கவிருக்கிறது.
இந்தக் குழுக்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு வாக்கில் 73 ஆக உயரும்.
இது ஒருபுறம் இருக்க, நினைவாற்றல் குறைபாடு உள்ளதாக புதிதாக அடையாளம் காணப்படும் மக்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் உதவுவதற்கான கிரஸ்ட் ஆதரவு குழுக்களின் எண்ணிக்கை மும்மடங்காகி ஆறாக உயரும்.
இந்தக் குழுக்கள் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பங்களை உரிய வளநிலையங்களுடன் இணைத்து பராமரிப்பாளர்கள் கிடைக்க உதவி செய்யும்.
இவை எல்லாம் நேற்று தொடங்கப்பட்ட செயல்திட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
அரசாங்கம் வெற்றிகரமான முறையில் மூப்படைவதற்கான செயல்திட்டம் ஒன்றை 2015ல் அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக, ஈசூன், பிடோக், தோ பாயோ ஈஸ்ட் போன்ற அக்கம்பக்கங்களில் நினைவாற்றல் குறைபாடு உள்ளோருக்கு உதவும் 15 அமைப்பு கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களில் 10 பேரில் ஒருவருக்கு ஏதோ ஒரு வகை நினைவாற்றல் இழப்பு குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
நினைவாற்றல் இழப்பு தொடர்பில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கப்படும் என்று புதிய செயல்திட்டம் அறிவித்து உள்ளது.
திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ஓங், மூப்படைவது என்பது வழமையான ஒன்றுதான் என்றாலும் கூடுமானவரை நாம் கடுமையான நோய்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
நினைவாற்றல் இழப்பு பாதிப்பைக் கையாளக்கூடிய நம்உத்தியில், அந்தக் குறைபாட்டை வருமுன் காப்பதுதான் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூப்படைதல் தொடர்பான அமைச்சர்நிலை குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஆகியேருடன் சுகாதார அமைச்சர் திரு ஓங் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

