பொது வீடுகள்: இரண்டு தனி மசோதாக்கள் விவாதிப்பு

பொது வீடுகள்: இரண்டு தனி மசோதாக்கள் விவாதிப்பு

2 mins read
fa89695f-fbc8-45f2-a9c8-605e82fc9145
-

சிங்கப்பூர் நாடாளுமன்றம் பிப்ரவரி 6ஆம் தேதி கூடுகிறது. சிங்கப்பூரர்களுக்கு அரசாங்க வீடுகள் எட்டக்கூடியவையாக, கட்டுப்படியான விலையில் இருப்பதன் தொடர்பிலான தனிப்பட்ட இரண்டு மசோதாக்களை அப்போது மன்றம் விவாதிக்கும்.

இப்போதைய, எதிர்கால சிங்கப்பூரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், அரசாங்க வீடுகளை மக்களுக்கு எட்டக்கூடியவையாக, கட்டுப்படியான விலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி நாடாளுமன்றத்தைக் கேட்டுக் கொள்ளும் மசோதா ஒன்றை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்த மசோதா, இந்த இரண்டையும் சாதிக்க அரசாங்கத்தின் உறுதியையும் கோருகிறது. பொது வீடு தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா உறுப்பினர்கள் ஜனவரி 20ஆம் தேதி தீர்மானம் ஒன்றை மன்றத்தில் தாக்கல் செய்தார்கள். அதைத் தொடர்ந்து இந்த மசோதா இடம்பெறுகிறது.

இதனிடையே, இது பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், திரு லீ தாக்கல் செய்திருக்கும் மசோதாவும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மசோதாவும் ஒன்று போலவே தெரியலாம். ஆனால் உண்மையிலேயே இரண்டும் ஒன்றல்ல என்று கூறினார்.

"நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதத்தின்போது அரசாங்கம் தன்னுடைய உறுதிப்பாட்டை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும்.

"அரசாங்க வீடுகள் சிங்கப்பூரர்களுக்கு எட்டக்கூடியவையாக இருக்கும். அவர்களின் நலனை அரசாங்கம் பாதுகாக்கும் என மன்றம் உறுதிபட தெரிவிக்கும்," என்று திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.

மன்றத்தில் பொருள்பொதிந்த விவாதம் இடம்பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாக திருவாட்டி சிம் மேலும் தெரிவித்துள்ளார்.