செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
43b70765-537c-46ae-83b8-9f8024048965
-

புதிய கட்டுப்பாட்டு முறை:

விமான தாமதங்கள் குறையும்

சிங்கப்பூரில் வருங்காலத்தில் விமானச் சேவைகள் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானப் போக்குவரத்தைச் சிறந்த முறையில் நிர்வகித்து, தாதமத்தைக் குறைக்கத் தோதாக புதிய விமானப் போக்குவரத்து நிர்வாகச் சாதன முறையை (ஏடிஎம்) அமைப்பதற்கான அடிப்படை பணிகளை சிங்கப்பூர் தொடங்கி இருக்கிறது.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், 2020களின் நடுப்பகுதியில் புதிய ஏடிஎம் சாதனத்தைக் கொள்முதல் செய்யலாம் என்பதும் அதை இந்தப் பத்தாண்டு கால முடிவில் பயன்படுத்தலாம் என்பதும் ஆணையத்தின் திட்டமாக இருக்கிறது.

அந்தக் கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளியைத் தான் பார்த்ததாகவும் அதன்மூலம் இவை தெரியவருவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இப்போது இருப்பதைவிட சிறப்பானதாக, விவேகமிக்கதாக புதிய முறை இருக்கும். ஆகையால் தாமதங்கள் குறையும்; பயணம் மிகவும் வசதியாக இருக்கும் என்று விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

விமானப் போக்குவரத்தால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேடு புதிய ஏடிஎம் முறை காரணமாகக் குறையும்; தேக்கம் குறையும்; தொழிலாளர் செலவு குறையும்; இன்று பணியில் இருக்கும் கிட்டத்தட்ட 500 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சுமை பெரிதும் குறையும் என்றும் அவர்கள் கூறினர்.

கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை டிசம்பரில் 0.8% கூடியது

கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டின் விலை தொடர்ந்து 29வது மாதமாக கடந்த டிசம்பரில் கூடியது. அதேவேளையில், கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்தது.

கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டின் விலை கடந்த நவம்பரில் 0.5% அதிகரித்தது. அந்த உயர்வு டிசம்பரில் 0.8%ஆக இருந்தது. 99.co என்ற நிலச்சொத்து இணையவாசல், எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றின் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இவை தெரியவருகின்றன.

இதனிடையே, டிசம்பரில் 661 வீடுகள் கைமாறியதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை நவம்பரில் 769 ஆக இருந்தது. சொத்துச் சந்தையை மட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன. பொதுவாகவே ஆண்டு முடிவில் விற்பனை குறைவாகவே இருக்கும்.

கைமாறிய வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து மூன்று மாதமாக குறைவாகவே இருந்து வந்ததற்கு இவையே காரணங்கள் என்று சொத்துத் துறை பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

உணவு பானக்கடைகளில் மதுபான அறிவிப்பு கட்டாயமாகிறது

சிங்கப்பூரில் உணவு, பானக் கடைகள், வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் தங்கள் கடைகளில் ஓர் அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும்.

கடையில் மதுபானம் விற்கப்படும் நேரம் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட வேண்டும். அந்த நேரத்திற்குப் பிறகும் அங்கு மதுபானம் குடிப்பது சட்டவிரோதமானது என்பதும் அறிவிப்பில் இடம்பெற்று இருக்க வேண்டும்.

உரிமம் பெற்று செயல்படும் இடங்களில் மதுபான விநியோகத்திற்கான ஒழுங்குமுறை நிபந்தனைகளை உள்துறை அமைச்சும் காவல்துறையும் மறுபரிசீலனை செய்ததை அடுத்து அந்த அறிவிப்பு கட்டாயமாகிறது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கடைக்கு வெளியே மதுபானம் குடிப்பதும் விநியோகமும் இடம்பெற்றால் அது சட்டவிரோதமான செயலாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்க வேண்டும்.

பார்வையில் படுகின்ற இடங்களில் அந்த அறிவிப்பு எடுப்பாக இடம்பெற்று இருக்க வேண்டும். அறிவிப்பை வைக்கத் தவறினால் $10,000 வரை அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.