வேலையிடத்துக்கு அப்பாற்பட்ட விவகாரங்களை ஆதரிக்கும் ஊழியர்களை பணியிடங்களில் எந்த வகையிலும் அச்சுறுத்தவோ ஒதுக்கி வைக்கவோ கூடாது என்று கூறும் மேம்படுத்தப்பட்ட வேலை நியமன வழிகாட்டிகள் அடுத்த மாதம் நடப்புக்கு வரும்.
அத்துடன், வேலைக்குத் தொடர்பில்லாத நிகழ்ச்சிகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை திட்டமிட்டு, விளம்பரப் படுத்தி, நடைமுறைப்படுத்தும்போது ஊழியர்கள் பல்வகை கலாசாரங்கள், பண்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதை முதலாளிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
மேலும், ஊழியர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முதலாளிகள் பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும் என்று வழிகாட்டிகள் குறிப்பிடும். குறைகளைக் கையாளும் ஒழுங்கான நடைமுறையை உருவாக்குவதும் அவற்றில் அடங்கும்.
இந்தப் புதிய வழிகாட்டிகள், நியாயமான வேலை நியமன நடைமுறை குறித்த முத்தரப்பு வழிகாட்டிகளில் சேர்க்கப்படும் என்று மனிதவள அமைச்சு, தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை அதை நேற்று கூட்டாகத் தெரிவித்தன. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த விரிவான வழிகாட்டிகள் நடப்புக்கு வரும்.
அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான பணியிடத்தின் முக்கியத்துவத்தை முதலாளிகள் தொடர்ந்து எடுத்துக்காட்டவும் எடுத்துரைக்கவும் செய்யவேண்டும் என்று அந்த முத்தரப்புப் பங்காளிகள் கூறின.
வேலை தொடர்பான நடைமுறைகளின்படிதான் ஊழியர் களின் செயல்திறன், பதவி உயர்வு போன்றவை மதிப்பிடப்பட வேண்டும் என்றும் வழிகாட்டிகள் குறிப்பிடும். வேலையுடன் தொடர்பில்லாத நிகழ்ச்சிகள், திட்டங்கள் அல்லது கொள்கைகள் ஆகியவற்றில் பங்கெடுக்கும்படி ஊழியர்கள் அழுத்தத்தை அல்லது கட்டாயத்தை எதிர்நோக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை ஆதரிக்காததால் அல்லது அவற்றில் கலந்துகொள்ளாததால் வேலை பாதிக்கப்படக்கூடாது என்றும் வழிகாட்டிகள் எடுத்துரைக்கும்.
வேலையிடத்தில் வேலைக்குத் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களுக்கு ஆதரவுதர உலகமெங்கும் உள்ள முதலாளிகளும் ஊழியர்களும் கூடுதல் முயற்சிகள் எடுத்து வருவதையும் முத்தரப்புப் பங்காளிகள் சுட்டின. இச்சூழலில் பல்வேறு நம்பிக்கைகள், திறன்கள், பின்னணிகள் உள்ள ஊழியர்களைத் தொடர்ந்து மதிக்கும் பணியிடங்களை உருவாக்கு வதன் முக்கியத்துவத்தைப் வழிகாட்டிகள் வலியுறுத்தும்.

