'ஷாப்பி' இணைய வர்த்தகத் தளத்தின் உரிமையாளரான 'சீ' நிறுவனம் மலேசியாவில் அதன் முதலீடுகளைப் பெருக்க உறுதி தெரிவித்துள்ளது. அதன்வழி 2,000க்கும் மேற்பட்ட நேரடி வேலைகளை உருவாக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள 'ஷாப்பி'யின் தலைமையகத்துக்கு நேற்று வருகை மேற்கொண்ட மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் இதைத் தெரிவித்தார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள ஒருநாள் வருகையின் ஒரு பகுதியாக திரு ஸஃப்ருல் முதலீடுகளைக் கைப்பற்ற இங்கு மூன்றுநாள் வருகை மேற்கொண்டுள்ளார்.
'சீ' சிங்கப்பூரின் ஆகப் பெரிய இணையவழி வர்த்தக நிறுவனமாகும். இணையம் வழியாக 'கிளவுட்' கணினிச் சேவைகளை வழங்குவது, இணையத் தரவு களுக்கு இணையத்தில் இடம் ஏற்படுத்துவது போன்றவற்றைத் தொடங்குவது திட்டங்களில் ஒன்றென மலேசியாவின் 'தி ஸ்டார்' செய்தித்தாள் நேற்று கூறியது.
ஜோகூரின் கூலாய் பகுதியில் பசுமைக் கூறுகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டு அதில் 'கிளவுட்' கணினிச் சேவைகள் வழங்கப்படும். அக்கட்டடத்தில் 24 தரவு அறைகள் இருக்கும். கட்டடத்தை 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் அமைக்கத் திட்டமிடப்படுவதாக தி ஸ்டார் கூறியது.
கிள்ளானில் உள்ள புக்கிட் ராஜா வட்டாரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மிகப் பெரும் கிடங்கின் வழி 'ஷாப்பி', மலேசியாவில் அதன் வர்த்தகத்தைப் பெருக்கும். அந்த இரண்டு மாடிக் கிடங்கு 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உயர் தொழில்நுட்பங்கள் உள்ள அக்கட்டடத்தில் இணைய வழிச் சேவைகளை வழங்கும் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
சிங்கப்பூர் மலேசியாவின் உற்பத்தித் துறையில் இரண்டாவது ஆகப் பெரிய முதலீட்டாளர் என்று மலேசிய அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சை மேற்கோள்காட்டி தி ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிட்டது. 3,475 திட்டங்களில் ஏறத்தாழ 96.36 பில்லியன் ரிங்கிட்டை (S$29.8 பி.) சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

