வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள், கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றுக்கான வாடகை கடந்த டிசம்பரில் தொடர்ந்து அதிகரித்தது.
வீட்டு உரிமையாளர்களுக்கு 2022 அனுகூலமான ஆண்டாக முடிவடைந்து இருக்கிறது.
என்றாலும், இந்த ஆண்டில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை கூடும் என எதிர் பார்க்கப்படுவதால் வாடகைதாரர்களுக்குக் கொஞ்சம் சுமை குறையும் என்று சில பகுப்பாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
கூட்டுரிமை வீட்டின் வாடகை நவம்பரில் 2.8% அதிகரித்தது. இந்த அதிகரிப்பு டிசம்பரில் 3% ஆக இருந்தது. மத்திய சிங்கப்பூரில் அமைந்துள்ள வீடுகளுக்கான வாடகை 3.9% கூடியதாக 99.co, எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை இணையவாசல்கள் மூலம் தெரியவருகிறது.
வீவக வீட்டு வாடகை கடந்த நவம்பரில் 2.5% கூடியது. இந்த அதிகரிப்பு டிசம்பரில் 2.8% ஆக இருந்தது. கூட்டுரிமை வீடுகளின் வாடகை தொடர்ந்து 24வது மாதமாக அதிகரித்து வந்துள்ளது. வீவக வீட்டு வாடகை தொடர்ந்து 30 மாதங்களாகக் கூடி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சென்ற ஆண்டில் கூட்டுரிமை வீடுகளின் வாடகை 34.4% அதிகரித்து இருக்கிறது. அதேநேரத்தில் வீவக வாடகை 28.5% கூடி இருக்கிறது.
வீடுகளின் வாடகை இந்த ஆண்டில் அவ்வளவாகக் குறையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும்கூட வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சிலருக்கு அது அனுகூலமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத் தொழில்துறை கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு சீராக மீட்சி கண்டு வருகிறது. இந்தச் சூழலில் கட்டி முடிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இதன் விளைவாக வாட கைக்குக் கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சொத்துத் துறை பகுப்பாய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.
ஏறக்குறைய 15,000 வீவக வீடுகளைப் பொறுத்தவரை அவற்றின் குறைந்தபட்ச ஐந்தாண்டு குடியிருப்புக் காலம் இந்த ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால், இந்த வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடமுடியும் என்று ஒன் குளோபல் குருப் என்ற நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளர் மோகன் சுந்தரசேகரன் கூறினார்.
இந்த ஆண்டில் சுமார் 20,000 பிடிஓ வீடுகள் கட்டி முடிக்கப்படு மென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகவும் வாடகை வீடுகள் அதிகமாகும் என்பதால் வாடகை படிப்படியாகக் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். இது ஒருபுறம் இருக்க, சுமார் 9,500 கூட்டுரிமை வீடுகள் 2022ல் கட்டி முடிக்கப்பட்டன என்றாரவர்.

