இளம் பிள்ளைகள் அதிக நேரம் தொடுதிரைச் சாதனங்களைப் பார்த்தபடியே பொழுதைக் கழித்தால் மூளையின் செயல்பாடுகள் மங்கும். பிறகு பல பிரச்சினைகள் ஏற்படும். எதிர்காலத்தில் கல்வி கற்கும் ஆற்றல் குறையும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
அந்த ஆய்வு, 506 குழந்தை களை உள்ளடக்கி நடத்தப்பட்டது. அளவுக்கு அதிக நேரம் கைப்பேசி முதலான தொடுதிரைச் சாதனங்களைப் பார்த்தபடியே இருந்த குழந்தைகளிடம் மூளை செயலாற்றல் குறைகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதிக நேரம் பார்க்க பார்க்க அதற்குத் தகுந்தாற்போல் மூளையின் செயல்பாடுகள் மேலும் பாதிக்கப்படும். இத்தகைய பிள்ளைகளிடம் அறிவாற்றல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
அத்தகைய பாதிப்புகள் ஒரு குழந்தை எட்டு வயதை எட்டிய பிறகும் தொடர்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் மருந்தக அறிவியல் பயிலகம், தேசிய கல்விக் கழகம், கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, மெக்கில் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்த ஆய்வை நடத்தினார்கள்.
ஆய்வு முடிவுகள் 'ஜாமா பிடியாட்ரிக்ஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

