குறுஞ்செய்திப் பதிவகம்: மோசடி பற்றி எச்சரிக்கும்
குறுஞ்செய்தி அனுப்புவோர் அடையாளப் பதிவகம் என்ற ஒரு பதிவகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் கிட்டத்தட்ட 2,000 நிறுவனங்கள் பதிந்துகொண்டுள்ளன. அதன் மூலம் அந்த நிறுவனங்கள் மோசடிகள் பற்றிய எச்சரிப்புத் தகவல்களைப் பெறமுடியும்.
அந்தப் பதிவகத்தில் தங்களைப் பதிந்துகொண்டு இருப்போருக்கு மோசடி வாய்ப்பு உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உருவாக்கி இருக்கும் அந்தப் பதிவகத்தில் அங்கம் பெறாத நிறுவனங்களுக்கு இப்போது அத்தகைய செய்தி வரும். ஆனால் ஜூலைக்குள் பதியவில்லை என்றால் அவை முற்றிலும் தடை செய்யப்படும்.
பயனீட்டாளர்களுடன் அடிக்கடி குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்ளும் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், இணைய வர்த்தக நிறுவனங்கள், இணையத்தளங்கள் போன்றவை உள்ளிட்ட சுமார் 2,000 நிறுவனங்கள் அந்தப் பதிவகத்தில் தங்களைப் பதிந்துகொண்டுள்ளன.
அந்தப் பதிவகம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. சிங்கப்பூரில் குறுஞ்செய்தி வழி அனுப்பப்படும் மோசடித் தகவல்கள் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு முதல் சென்ற ஆண்டு இரண்டாவது காலாண்டு வரைப்பட்ட காலகட்டத்தில் 64% குறைந்து இருக்கிறது. இதற்கு அந்தப் பதிவகம் அமைக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் மின்சாரம் இறக்குமதி செய்யும்
சிங்கப்பூர், இரண்டு ஆண்டு பரிசோதனையின் ஒரு பகுதியாக மலேசியாவில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வர்த்தக ரீதியில் இதன் மூலம் மின்சாரம் முதன்முதலாக விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.
'ஒய்டிஎல் பவர்செராயா' என்ற நிறுவனத்திற்கும் 'டிஎன்பி ஜென்கோ' என்ற நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்றுள்ள கூட்டு இணக்கத்தை அடுத்து இது சாத்தியமாகிறது. இறக்குமதியாகும் மின்சாரம், சுமார் 144,000 வீவக நாலறை அடுக்குமாடி வீடுகள் ஓராண்டு காலம் பயன்படுத்தும் அளவுக்குச் சமமானது. சிங்கப்பூர் உச்ச நேரத்தில் பயன்படுத்தும் மின்சக்தியில் அது 1.5%க்குச் சமம்.
உடன்பாடு செய்துகொண்டுள்ள இரண்டு தரப்புகளும், சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம், மலேசியாவின் எரிசக்தி ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு, தொழில்நுட்ப, ஒழுங்குமுறை ஏற்பாடுகளைச் செய்து முடிக்கும். நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்பட்சத்தில் உடன்பாடு நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பங்காளித்துவ உடன்பாடு நேற்று முன்தினம் மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மலேசியாவின் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சர் ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் இருவரின் முன்னிலையில் கையெழுத்தானது. அதையடுத்து அது அதிகாரபூர்வமான ஒன்றாக ஆனது.
உடற்குறையாளர்களுக்குத் தாதிமை இல்லங்களில் வேலை
எஸ்ஜி எனேபில் என்ற அமைப்பு, உடற்குறை யாளர்களைச் சமூகத்தில் ஒருங்கிணைப்பதற்கான மைய அமைப்பாகச் செயல்படுகிறது.
அந்த அமைப்பின் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 250 பேர் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள்.
அவர்கள், அறிவு மந்த குறைபாடு அல்லது வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள். அவர்களில் சுமார் 80 பேர் தாதிமை இல்லங்களில் பணியாற்றுகிறார்கள்.
இத்தகைய குறைபாடுகளுடன் கூடியவர்கள் வேலைபார்க்க அதிகமான சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படும். வேலை நேரம் நீக்குப்போக்கானதாக இருக்க வேண்டும். எளிதான வேலைகளையே இவர்கள் செய்ய முடியும். உடற்குறை உள்ளவர்களைவிட இவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். இவர்களில் பெரும்பாலானவர்கள் துப்புரவு போன்ற எளிமையான வேலைகளைச் செய்வார்கள்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புக்கும் (AIC) எஸ்ஜி எனேபில் அமைப்புக்கும் இடையில் சென்ற ஆண்டு அக்டோபரில் புதிய இணக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, 12 சமூகப் பராமரிப்பு நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

