சிங்கப்பூரர்கள் இனி சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளை 'ஜயன்ட்', 'அங் மோ' ஆகிய பேரங்காடிகளில் பயன்படுத்தலாம். நேற்று இது நடப்புக்கு வந்தது.
தென்மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங் இந்தத் தகவலை ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டார்.
சிங்கப்பூரில் உள்ள 55 'ஜயன்ட்' கிளைகள், 12 'அங் மோ' கிளைகள் ஆகியவற்றில் இப்பற்றுச்சீட்டுகளை பயன்படுத்தலாம் என்று சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளுக்கான இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம், ஹாவ் மார்ட், யூ ஸ்டார்ஸ் ஆகிய ஐந்து பேரங்காடிகளில் 'சிடிசி' பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏழு பேரங்காடிகளின் கிளைகளையும் சேர்த்து மொத்தம் 360க்கு மேற்பட்ட கடைகளிலும் 20,600க்கு மேற்பட்ட குடியிருப்புப் பேட்டைக் கடைகளிலும் சிங்கப்பூரர்கள் இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திப் பொருள்களை வாங்கலாம்.
இந்த ஆண்டுக்கான $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் சென்ற மாதம் 3ஆம் தேதி வழங்கப்பட்டன. இவற்றை 90 விழுக்காட்டு சிங்கப்பூர் குடும்பங்கள் பெற்றுக்கொண்டதாக மேயர் லோ தெரிவித்தார்.