முகமது இர்ஃபான் டன்யால் முகமது நூர் எனும் 18 வயது இளையர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நேற்று அறிவித்தது.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அந்த இளையர் இணையத்தில் 'ஐஎஸ்' பயங்கரவாத அமைப்பின் அறிக்கைகளைப் படித்து தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அதன் பிறகு சிங்கப்பூரில் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டார்.
இர்ஃபான் 2020ஆம் ஆண்டு, வெளிநாட்டு போதகர்களின் யூடியூப் காணொளிகளைப் பார்த்த பிறகு தீவிரவாதப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கினார்.
சமூக ஊடகங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்றதன்வழி 'ஐஎஸ்' பயங்கரவாத அமைப்பின் பிரசாரங்களைத் தெரிந்துகொண்டார்.
பின்னர் 2021ல் தன்னை 'ஐஎஸ்' போராளியாகச் சித்திரிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
சிங்கப்பூரில் இஸ்லாமிய கலிஃபேட் அரசை நிறுவி, முஸ்லிம்களை அதில் சேர்க்கவும் திட்டமிட்டார்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, கோனித் தீவிற்குச் சென்ற இர்ஃபான், அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய சிரியா நாட்டு பயங்கரவாதக் குழுவின் கொடியை மாதிரியாகக் கொண்டு தானே தயாரித்த கொடி ஒன்றை அங்கு நாட்டினார்.
சிங்கப்பூரின் தேசிய தினத்தில் சொந்தமாக கலிஃபேட்டைத் தொடங்குவது அவரது நோக்கம். அக்கொடியின் படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் சிங்கஃபூரா' எனும் அந்த அமைப்பில் சேரும்படி கோரிக்கை விடுத்தார்.
பின்னர் 'நம்பிக்கை அற்றவர்களைக்' கொல்லும் திட்டத்துடன் கத்தி ஒன்றை வாங்கினார் இர்ஃபான்.
முஸ்லிம் அல்லாதோர், ஷியா முஸ்லிம்கள், சூஃபி முஸ்லிம்கள் ஆகியோரை 'நம்பிக்கை அற்றவர்கள்' என்று அவர் வகைப்படுத்தியுள்ளார்.
இர்ஃபான் கைது செய்யப்பட்டபோது இதேபோல் வேறு இரண்டு தாக்குதல் திட்டங்களுக்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இவற்றை எப்போது நடத்துவது என்று அவர் முடிவுசெய்திருக்கவில்லை.
அக்டோபர் 2022ல் நைஜீரியா சென்று மேற்கு ஆப்பிரிக்காவில் இயங்கும் 'ஐஎஸ்' பிரிவில் சேர முடிவெடுத்தார். அது சாத்தியமாகாவிட்டால் ஈராக், சிரியா, பிலிப்பீன்சின் மராவி ஆகிய இடங்களில் ஏதாவது ஓரிடத்துக்குச் சென்று அங்கு போராளிகளுடன் சேர விரும்பினார்.
சென்ற ஆண்டு நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தேசிய மாணவர் படையின் சீருடையை அணிந்துகொண்டு கோனித் தீவில் 'ஐஎஸ்' அமைப்புக்கான உறுதிமொழி எடுப்பதுபோல் காணொளியில் பதிவுசெய்யத் திட்டமிட்டார்.
சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த 100 முதல் 500 போராளிகளைத் தயார்ப்படுத்துவதும் இர்ஃபானின் திட்டம். தேசிய மாணவர் படைத் தலைமையகத்தில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார்.
கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்துவதும் அவரது சதித்திட்டங்களில் அடங்கும். இதன் தொடர்பில் இணையத்தில் அவர் தகவல் சேகரித்தார்.
ஆனால் சென்ற ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில், கோனித் தீவில் காணொளி எடுப்பதற்கு முன்பாகவே இர்ஃபான் கைது செய்யப்பட்டார். அவர் உடனடிப் பாதுகாப்பு மிரட்டலாகக் கருதப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியது.
கைது செய்யப்பட்டபோது அவரது தாக்குதல் திட்டங்கள் சிந்தனை அளவிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இர்ஃபான் தனித்துச் செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர் வேறு யாரையும் தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கவில்லை.
சதித்திட்டத்தில் பங்குகொள்ள ஆள்சேர்ப்பிலும் வெற்றிபெறவில்லை.
இர்ஃபானின் சதித்திட்டங்கள் குறித்தோ அவர் வெளிநாடு சென்று ஆயுதமேந்திப் போரிட முயற்சி செய்தது குறித்தோ குடும்பத்தினர் யாரும் அறிந்திருக்கவில்லை.