ஈராண்டு கொவிட்-19 கட்டுப்பாடு களுக்குப் பிறகு அதிகமானோர் மீண்டும் வேலைக்கும் வெளியிலும் செல்லத் தொடங்கிய நிலையில், சென்ற ஆண்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சி அடைந்து வந்தது.
சென்ற ஆண்டு சராசரியாக அன்றாடம் 6.39 மில்லியன் ரயில், பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது 2021ஐ காட்டிலும் 21 விழுக்காடு அதிகம்.
2019ல் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு அதன் உச்சத்தை அடைந்தது. அதில் 83 விழுக்காடு சென்ற ஆண்டு எட்டப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று கூறியது.
எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் பயணங்கள் கடந்தாண்டு 30 விழுக்காடு கூடின. அவற்றில் சராசரியாக அன்றாடம் 2.929 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. பேருந்துப் பயணங்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு உயர்ந்து, அன்றாட சராசரி 3.461 மில்லியன் ஆனது. ஒப்புநோக்க 2021ல் போக்குவரத்துப் பயணங்களின் மீட்சியில் பேருந்துப் பயணங்கள் முன்னிலை வகித்தன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் செயல்படத் தொடங்கியதால் ரயில் பயன்பாடு கூடிஇருக்கலாம் என்று கவனிப் பாளர்கள் கூறினர். இப்போக்கு வரும் ஆண்டுகளில் தொடரும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், தனியார் வாடகை கார் பயணங்களின் தினசரி எண்ணிக்கை எட்டு விழுக்காடு கூடி 347,000 ஆனது. டாக்சி பயணங்கள் ஒரு விழுக்காடு உயர்ந்து 235,000 ஆகின. கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் இத்தகைய பயணங்களுக்கான தேவை குறைந்திருக்கலாம்.
அத்துறையில் ஓட்டுநர் பற்றாக்குறை இருப்பதை மூத்த போக்குவரத்து துணை அமைச்சர் ஏமி கோர் சுட்டினார். கிராப் நிறுவனத்தின் சீனப் புத்தாண்டு விருந்தில் பேசிய அவர், 2022ல் 57,000 வாடகை கார் ஓட்டுநர்களும் 2021ல் 59,000 ஓட்டுநர்களும் பணியாற்றினர் என்றார்.