தீவிரவாத போதனைகளால் ஈர்க்கப்பட்டு தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொண்ட 18 வயது மாணவர் ஒருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இஸ்லாம் பெயரில் வன்செயல்களை அரங்கேற்றுவதற்கு இடமே கிடையாது என்று நாட்டின் ஆக உயரிய முஸ்லிம் தலைவர் கூறி இருக்கிறார்.
முகம்மது இர்ஃபான் டன்யாஸ் முகம்மது நூர் என்ற அந்த மாணவர், தவறாக வழிகாட்டப்பட்ட முஸ்லிம் இளையர் என்று சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் நசிருதீன் நாசர் இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
அந்த இளைஞர், இணையத்தில் இடம்பெறும் தீவிரவாத சித்தாந்தங்கள், குழுக்களின் வலையில் விழுந்து அதன்வழி தன்னுடைய சமய நம்பிக்கையைத் தவறான, ஆபத்தான முறையில் பயன்படுத்த முயன்று இருக்கிறார் என்று முஃப்தி தெரிவித்தார்.
இர்ஃபான், சென்ற ஆண்டு டிசம்பரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
அவர், இருட்டான சந்துகளில் முஸ்லிம் அல்லாதவர்களைக் குத்திக் கொல்ல திட்டமிட்டிருந்தார்.
கார் மூலம் தற்கொலை தாக்குதலை நடத்தக்கூடிய ஓர் ஆளை நியமித்து, அமோய் குவீ முகாமில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை அரங்கேற்ற அவர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தஞ்சோங் பகாரில் உள்ள ஹாஜி முகம்மது சாலே பள்ளிவாசலின் இடுகாட்டைக் குண்டு வைத்துத் தாக்கும் வகையில் சி4 கருவியை உருவாக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
இஸ்லாமிய சமயம் கருணை யையும் நற்குணங்களையும் போதிக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இளையரை இணங்கச் செய்து அவர்களை நல்வழிப்படுத்த மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும் சிங்கப்பூர் முஃப்தி கோரிக்கை விடுத்தார்.
இர்ஃபான், 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட, 21 வயதுக்குக்கீழ் உள்ள ஐந்தாவது நபர் ஆவார்.
இந்தப் போக்கு கவலை தருவதாக உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.