மாண்டுகிடந்த தேசிய சேவையாளர் துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்க பரிசீலிக்கப்பட்டது

மாண்டுகிடந்த தேசிய சேவையாளர் துப்பாக்கி வைத்திருக்க தடை விதிக்க பரிசீலிக்கப்பட்டது

2 mins read
a2c0b699-6aac-45bf-a8a5-b13ca9eaefe3
-

காவல்­து­றை­யில் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்த ஃபின்கன் டான் யாவ் ஜியே­வின் மேலதிகாரிகள், அவர் துப்­பாக்­கி­யைப் பயன்­ப­டுத்த தடை விதிப்­பது குறித்து பரி­சீ­லித்­தது பற்றி அவ­ரது மரண விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி துப்­பாக்­கிக் குண்டு காயத்­து­டன் 21 வயது திரு டான் மாண்­டு­கிடக்­கக் காணப்­பட்­டார்.

மோசடி ஒன்­றில் திரு டான் பணத்தை இழந்­தது பற்றி தாங்­கள் அறிந்­த­வு­டன், அவர் துப்­பாக்கி வைத்­தி­ருக்க தடை விதிப்­பது குறித்து அவ­ரு­டைய மேலதிகாரிகள் பரி­சீ­லித்­த­தாக திரு டானின் மர­ணம் தொடர்­பிலான முதல் நாள் விசா­ர­ணை­யில் நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2021 நடுப்­ப­கு­தி­யில் வேறோரு சம்­ப­வ­மும் நிகழ்ந்­தது. குவீன்ஸ்­வே­யில் அமைந்­துள்ள சிறப்பு நட­வ­டிக்­கை­கள் தள­பத்­தி­யத்­தில் உள்ள கழி­வ­றை­யில் திரு டான் கத்­தி­யதை சக அதி­காரி ஒரு­வர் கேட்­டார்.

முந்­தைய நாள் தமது உயிரை மாய்த்­துக்­கொள்­ளப் பார்த்­த­தாக திரு டான் அப்­போது கூறி­யி­ருந்­தார்.

உள­வி­யல் ஆத­ரவு வழங்­கு­வதில் பயிற்­சி­பெற்ற திரு டானின் மேலதிகாரிகளில் ஒரு­வர் திரு டானி­டம் பேசி­ய­தாக இந்­தச் சம்­ப­வத்­தைப் புல­னாய்வு செய்­யும் காவல்­துறை அதி­காரி ஒரு­வர் கூறி­னார். ஆனால், தாம் வெறும் உணர்ச்சி பொங்க பேசி­ய­தாக திரு டான் அப்­போது சொல்­லி­யி­ருந்­தார்.

திரு டான், ஒரு சில வாரங்­களுக்­குப் பாட வகுப்­பு­க­ளுக்­குச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. அப்­போது அவர் துப்­பாக்கி வைத்­து இருக்க முடி­யாது.

திரு டான் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சிந்­த­னை­யைக் கொண்­டி­ருக்­கவோ மனச்­சோர்­வு­டன் இருக்­கவோ இல்லை என்று அவ­ரு­டைய மேலதிகாரி தீர்­மா­னித்­தார்.

என்­றா­லும், திரு டான் துப்­பாக்­கி­யைப் பயன்­படுத்த தடை விதிப்­பது பற்றி அவர் பரி­சீ­லித்­துக்­கொண்டு இருந்­த­போது திரு டான் மாண்­டு­விட்­டார்.

நிதி மோச­டி­யில் $10,000க்கும் மேலான தொகையை இழந்­த­தைத் தொடர்ந்து திரு டான் வேத­னைக்கு ஆளா­னார்.

அந்­தத் தொகை­யில், தம்­மு­டைய தந்­தை­யி­ட­மி­ருந்து அவர் கட­னாக பெற்ற $7,000யும் அடங்­கும்.

துப்­பாக்­கிச்­சூட்­டிற்கு முன்பு, 2021 ஆகஸ்ட்­டில் காவல்­து­றை­யிடம் திரு டான் புகார் அளித்­தி­ருந்­தார்.

சம்­பவ நாளன்று காலை 10.30 மணி­ய­ள­வில் சிறப்பு நட­வ­டிக்­கை­கள் தள­பத்­தி­யத்­தில் திரு டான் பணிக்கு வந்­த­தாக மரண விசா­ரணை அதி­காரி ஆடம் நகோ­டா­வி­டம் புல­னாய்வு அதி­காரி கூறி­னார். அவ­ருக்கு துப்­பாக்­கி­யும் தோட்­டாக்­களும் வழங்­கப்­பட்­டன.

துப்­பாக்­கிச்­சூடு சத்­தத்­தைக் கேட்ட சக அதி­கா­ரி­கள், தவ­று­த­லாக துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­தாக நினைத்­த­னர்.

ஆனால், திரு டானை காண­வில்லை என்­பதை அவர்­களில் ஒரு­வர் அறிந்­த­தைத் தொடர்ந்து அதி­கா­ரி­கள் திரு டானை தேடி­னர். கழி­வ­றை­யில் விழுந்­து­கிடந்த திரு டான், தலை­யில் துப்­பாக்­கிக் குண்டு காயத்­து­டன் கண்­ட­றி­யப்­பட்­டார்.

இது­கு­றித்து மேல­தி­கா­ரி­களுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­பவ இடத்­திற்கு வந்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள், திரு டான் இறந்­து­விட்­டதை அன்­றைய தினம் காலை 11.20 மணி­ய­ள­வில் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து மரண விசா­ரணை அதி­காரி தமது தீர்ப்பை பின்னொரு தேதி­யில் வழங்­கு­வார்.