காவல்துறையில் முழுநேர தேசிய சேவையாளராக இருந்த ஃபின்கன் டான் யாவ் ஜியேவின் மேலதிகாரிகள், அவர் துப்பாக்கியைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலித்தது பற்றி அவரது மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி துப்பாக்கிக் குண்டு காயத்துடன் 21 வயது திரு டான் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
மோசடி ஒன்றில் திரு டான் பணத்தை இழந்தது பற்றி தாங்கள் அறிந்தவுடன், அவர் துப்பாக்கி வைத்திருக்க தடை விதிப்பது குறித்து அவருடைய மேலதிகாரிகள் பரிசீலித்ததாக திரு டானின் மரணம் தொடர்பிலான முதல் நாள் விசாரணையில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2021 நடுப்பகுதியில் வேறோரு சம்பவமும் நிகழ்ந்தது. குவீன்ஸ்வேயில் அமைந்துள்ள சிறப்பு நடவடிக்கைகள் தளபத்தியத்தில் உள்ள கழிவறையில் திரு டான் கத்தியதை சக அதிகாரி ஒருவர் கேட்டார்.
முந்தைய நாள் தமது உயிரை மாய்த்துக்கொள்ளப் பார்த்ததாக திரு டான் அப்போது கூறியிருந்தார்.
உளவியல் ஆதரவு வழங்குவதில் பயிற்சிபெற்ற திரு டானின் மேலதிகாரிகளில் ஒருவர் திரு டானிடம் பேசியதாக இந்தச் சம்பவத்தைப் புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால், தாம் வெறும் உணர்ச்சி பொங்க பேசியதாக திரு டான் அப்போது சொல்லியிருந்தார்.
திரு டான், ஒரு சில வாரங்களுக்குப் பாட வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் துப்பாக்கி வைத்து இருக்க முடியாது.
திரு டான் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனையைக் கொண்டிருக்கவோ மனச்சோர்வுடன் இருக்கவோ இல்லை என்று அவருடைய மேலதிகாரி தீர்மானித்தார்.
என்றாலும், திரு டான் துப்பாக்கியைப் பயன்படுத்த தடை விதிப்பது பற்றி அவர் பரிசீலித்துக்கொண்டு இருந்தபோது திரு டான் மாண்டுவிட்டார்.
நிதி மோசடியில் $10,000க்கும் மேலான தொகையை இழந்ததைத் தொடர்ந்து திரு டான் வேதனைக்கு ஆளானார்.
அந்தத் தொகையில், தம்முடைய தந்தையிடமிருந்து அவர் கடனாக பெற்ற $7,000யும் அடங்கும்.
துப்பாக்கிச்சூட்டிற்கு முன்பு, 2021 ஆகஸ்ட்டில் காவல்துறையிடம் திரு டான் புகார் அளித்திருந்தார்.
சம்பவ நாளன்று காலை 10.30 மணியளவில் சிறப்பு நடவடிக்கைகள் தளபத்தியத்தில் திரு டான் பணிக்கு வந்ததாக மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடாவிடம் புலனாய்வு அதிகாரி கூறினார். அவருக்கு துப்பாக்கியும் தோட்டாக்களும் வழங்கப்பட்டன.
துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்ட சக அதிகாரிகள், தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நினைத்தனர்.
ஆனால், திரு டானை காணவில்லை என்பதை அவர்களில் ஒருவர் அறிந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் திரு டானை தேடினர். கழிவறையில் விழுந்துகிடந்த திரு டான், தலையில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கண்டறியப்பட்டார்.
இதுகுறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், திரு டான் இறந்துவிட்டதை அன்றைய தினம் காலை 11.20 மணியளவில் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து மரண விசாரணை அதிகாரி தமது தீர்ப்பை பின்னொரு தேதியில் வழங்குவார்.

