எஸ்பிஎச் மீடியாவில் செய்தித்தாள் விற்பனை எண்ணிக்கை கூட்டிக் காட்டப்பட்ட விவகாரம் வரும் திங்கட்கிழமை 6ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் கவனம் பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் அதன் தொடர்பில் 17 கேள்விகள் களை எழுப்பப்படும்.
எஸ்பிஎச் மீடியாவில் ஐந்தாண்டுகளில் $900 மில்லியனை முதலீடு செய்யும் முடிவை அந்த விவகாரத்தால் அரசாங்கம் மாற்றிக்கொள்ளுமா என்பதில் 13 கேள்விகள் கவனம் செலுத்தும்.
எஸ்பிஎச் மீடியா 2020 செப்டம்பர் முதல் 2022 மார்ச் வரையிலான அதன் செய்தித்தாள் விற்பனை எண்ணிக்கையை மறுஆய்வு செய்தபோது, சில செய்தித்தாள்களின் அன்றாட சராசரி விற்பனை எண்ணிக்கை 85,000 பிரதிகள் முதல் 95,000 பிரதிகள் வரை கூட்டிக் காட்டப்பட்டது தெரியவந்தது.
அந்த விவகாரம் வெளிவர ஏன் இவ்வளவு காலமானது, அதனால் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் அறநிறுவனத்தின்மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கை பாதிக்கப்படுமா, அது குறித்து திட்டமிடப்படும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் கேள்விகள் முன்வைக்கப்படும்.
மேலும், வரும் திங்களன்று அதிபர் தேர்தல் சட்டத்திருத்தங்கள் குறித்த இரண்டு மசோதாக்களை பிரதமர் லீ சியன் லூங் முன்வைப்பார். அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் இவ்வாண்டு செப்டம்பருக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அத்துடன், அரசாங்க வீடுகள் கட்டுப்படியான விலையில் உள்ளனவா என்பதும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் தொடர்பில் இரண்டு வெவ்வேறு தீர்மானங்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் லியோங் மன் வாய், ஹேசல் புவா இருவரும் அவற்றில் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மற்றொரு தீர் மானத்தை முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், கெப்பல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் பிரேசில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்த விவகாரம் பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கேள்விகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

