சிங்கப்பூரிலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேளை உணவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூ சியட் வட்டாரத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு 25,000 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து கிலோகிராம் மெடோஸ் தாய்லாந்து அரிசி அடங்கிய 5,000 பொட்டலங்களை டிஎஃப்ஐ ஹெவ் யூ ஈட்டன் (நீங்கள் சாப்பிட்டீர்களா) என்ற திட்டத்தின்கீழ், டிஎஃப்ஐ நிறுவனமும் யுஓபி வங்கியும் விநியோகித்தன. டிஎஃப்ஐ நிறுவனம் ஜயன்ட், கோல்ட் ஸ்டோரெஜ் கடைகளை நடத்தி வருகிறது.
தி ஃபுட் பேங் சிங்கப்பூர் எனும் லாபநோக்கமற்ற அமைப்புடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட உணவு விநியோகத் திட்டம் சென்ற ஆகஸ்ட் தொடங்கப்பட்டது. வசதி குறைந்தவர்களின் பசியைக் குறைத்து உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பது அதன் நோக்கம். சிக்லாப் சவுத் சமூக மன்றத்தில் நேற்று மாலை வழங்கப்பட்ட அரிசி, 62,500 வேளை உணவுக்குச் சமமாகும்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூரின் பண்டிகைகளில் உணவு முக்கிய இடம் பிடிப்பதையும் உள்ளூர்வாசிகள் அரிசியை உணவாக பிரதானமாக உண்பதையும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சிலர் அரிசி வாங்க சிரமப்படுவதாக அவர் கூறினார்.

