சிங்கப்பூரில் முன்பணமாக கட்டிய ஏறக்குறைய 645,000 வெள்ளியை பயனீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
ஒப்பனைத் துறையில் அதிக தொகையை வாடிக்கையாளர்கள் இழந்தனர். இதற்கு அடுத்ததாக பயணத் துறையில் அதிக தொகை இழக்கப்பட்டு உள்ளது.
2021ஆம் ஆண்டில் இழந்த மொத்த முன்பணம் 520,000 வெள்ளி. இதனுடன் ஒப்பிடுகையில் 2022ல் இழந்த தொகை 24 விழுக்காடு அதிகரித்தது.
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் நேற்று வெளியிட்ட வருடாந்திர புகார்கள் தொடர்பான புள்ளி விவர அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஒப்பனைத் துறையில் பயனீட்டாளர்கள் இழந்த மொத்த முன்பணத்தின் மதிப்பு 285,000 வெள்ளி.
இது, ஆண்டின் மொத்த இழப்பீட்டில் சுமார் 44 விழுக்காடாகும்.
பயணத்துறையில் 22 விழுக்காடு, அதாவது 141,000 வெள்ளியை வாடிக்கையாளர்கள் இழந்தனர்.
ஒப்பனைத் துறையில் சிகை அலங்காரம், தலைமுடி சிகிச்சை, உடற்பிடிப்பு போன்வற்றுக்காக முன்பணம் கட்டியவர்கள் நிறு வனங்கள் திடீரென மூடப்பட்டதால் பணத்தை திரும்பப் பெற முடியாமல் போனது.
இதேபோல விமானப் பயணம் மற்றும் ஹோட்டல் அறைகளுக்கு முன்பணம் செலுத்தியவர்கள் கொள்ளைநோய் பிரச்சினை காரணமாக முன்பதிவை ரத்து செய்தாலும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.
புதுப்பிப்பு பணிகளைச் செய்யும் சிறிய நிறுவனங்களில் சில திடீரென மூடப்பட்டன. இதனால் புதுப்பிப்பு ஒப்பந்ததாரர்களிடம் சுமார் $49,000 முன்பணத்தை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022இல் அதிக தொகையை வாடிக்கையாளர்கள் இழந்தது கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
பொருளியல் நிச்சயமற்ற சூழ்நிலையில் இழப்பு அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் முன் பணத்தை பாதுகாக்கும் சில நடைமுறைகளை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்று பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. குறிப்பாக அதிக முன்பணத்தை வசூலிக்கும் ஒப் பனைத் துறை, புதுப்பிப்பு துறைகளில் அத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று சங்கம் விரும்புகிறது.