சிராங்கூன் நார்த் அவென்யூ4க்கு அருகே வசிப்பவர்கள், தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.
இதற்குத் தோதாக, ஜாலான் காயூ சமூக சுகாதார நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. அதில் மானியத்துடன் கூடிய கட்டணம் வசூலிக்கப்படும். குடியிருப்பாளர்கள் மாதாமாதம் தங்கள் உடல்நலனைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
சமூகத்தில் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய உடல்நலனைத் தாங்களே நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதை ஊக்கமூட்டும் வகையில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை மக்கள் முன்னதாகவே தெரிந்துகொள்ள இந்தப் புதிய நிலையம் உதவும்.
மக்கள் கழகத்தின்கீழ் செயல்படும் ஜாலான் காயூ தொகுதி அலுவலகம் இந்த நிலையத்தைத் தொடங்கி இருக்கிறது.
முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இலவசமாகப் பரிசோதனைகளை செய்துகொள்ளலாம். மெர்டேக்கா தலைமுறைதாரர்கள் அல்லது சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) சேர்ந்து இருப்போருக்கு கட்டணம் $2.
இதர வகை சாஸ் அட்டையைக் கொண்டிருப்போருக்கு $5 கட்டணமாக வசூலிக்கப்படும். மற்றவர்களுக்கு கட்டணம் $20.
வீட்டில் உடல்நலனுக்குத் தோதான உணவுகளைச் சமைக்கும் முறைகள் பற்றி வல்லுநர்கள் அந்த நிலையத்தில் உரையாற்றுவார்கள். உடற்பயிற்சி வகுப்புகளும் அங்கு நடக்கும்.
புதிய நிலையம் நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கும்.
அந்த நிலையம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். நிலையத்தை நிர்வகிக்க தொண்டூழியர்கள் அதிகமாகக் கிடைக்கும்போது மாலை 6 மணி வரை நிலையம் செயல்படும்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளும்படி மக்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் முதலில் தங்களைப் பதிந்துகொள்ளும் 1,000 பேருக்கு காஹா பிரைவெட் லிமிட்ட்டெ தயாரிக்கும் இலவச கைக்கடிகாரம் வழங்கப்படும்.
அந்தக் கடிகாரங்களைக் கொண்டு தனியார் மருத்துவர்கள் நோயாளிகளைக் கண்காணிக்கவும் முடியும் என்று தெரிகிறது.

